மார்கழி திங்கள் விமர்சனம்: இயக்குநராக தன் முதல் படைப்பில் முத்திரைப் பதிக்கிறாரா மனோஜ் பாரதிராஜா?

0

திண்டுக்கல் மாவட்டம் நெய்காரபட்டியில் தன் தாத்தாவுடன் (பாரதிராஜா) வாழ்ந்து வருகிறார் தாய், தந்தையை இழந்த கவிதா (ரக்‌ஷனா). பத்தாம் வகுப்பு படிக்கும் கவிதாவிற்கும், அவரின் சக வகுப்பு மாணவரான வினோத்திற்கும் (ஷியாம் செல்வம்), யார் முதல் மதிப்பெண் எடுப்பது என்ற போட்டி எழுகிறது. அது மோதலாக... அப்படியே காதலாகவும் மாறுகிறது. தன் மீது உயிரையே வைத்திருக்கும் தன் தாத்தாவிடம் வினோத்தின் காதலைப் பற்றிச் சொல்கிறார் கவிதா. ஆதிக்கச்சாதியைச் சேர்ந்தவரான தாத்தா, தன் பேத்தியை ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த வினோத்திற்குத் திருமணம் செய்து வைக்கத் தயங்குகிறார். அதனால், காதலை முழுமனதாக ஏற்கவும் இல்லாமல், மறுக்கவும் இல்லாமல், காதலர்களுக்கு ஒரு நிபந்தனையை விதிக்கிறார். அந்த நிபந்தனை என்ன, அந்த நிபந்தனையாலும் காதலுக்கு எதிராக நிற்கும் ஆதிக்க சாதியினராலும் காதலர்களின் வாழ்க்கை என்னவாகிறது என்பதைப் பேசுகிறது மனோஜ் பாரதிராஜாவின் 'மார்கழி திங்கள்'.

மார்கழி திங்கள் விமர்சனம்

அறிமுக நடிகர் ரக்‌ஷனா, தன் தேர்வை நியாயப்படுத்தியிருக்கிறார். சில காட்சிகளில் செயற்கைத்தனம் எட்டிப்பார்த்தாலும், அக்கதாபாத்திரத்திற்குத் தேவையான காதல், ஏமாற்றம், கோபம், இயலாமை ஆகியவற்றைக் கச்சிதமாகக் கடத்தியிருக்கிறார். அறிமுக நடிகர் ஷியாம் செல்வம், சில காட்சிகளில் மட்டும் பாஸ் மார்க் வாங்குகிறார். தன் தளர்ந்த உடலாலும், குரலாலும் படத்திற்கு உயிரூட்டப் போராடியிருக்கும் பாரதிராஜா படத்திற்குப் பலம். அவரை இன்னும் ஆழமாகப் பயன்படுத்தியிருக்கலாம். ஓரிரு வசனங்களை மட்டும் பேசி விட்டு, செட் பிராப்பர்ட்டி போலப் படம் முழுவதும் வந்து போகிறார் அப்புக்குட்டி. வில்லனாக தன்னைக் காட்டிக்கொள்ள ஒவ்வொரு காட்சியிலும் பெரும் முயற்சி செய்கிறார் இயக்குநர் சுசீந்திரன். ஆனால், குறைந்தபட்சம் ஒரு பிரதான கதாபாத்திரம் என்ற ரீதியில் கூட அக்கதாபாத்திரம் பார்வையாளர்கள் மனதில் நிற்கவில்லை. கவிதாவின் தோழியாக வரும் அறிமுக நடிகர் நக்‌ஷா, தன் கச்சிதமான நடிப்பால் கவனிக்க வைக்கிறார்.

வாஞ்சிநாதன் முருகேஷனின் ஒளிப்பதிவும், தியாகுவின் படத்தொகுப்பும் படத்திற்கு எந்தப் பலத்தையும் சேர்க்கவில்லை. பழநி வட்டார கிராமங்களையும் அதன் வீடுகளையும் காட்சிகளில் நேர்த்தியாகவும் பாடல்களில் அழகாகவும் காட்டிய விதம் மட்டும் கொஞ்சம் ஆறுதல்! இளையராஜாவின் இசையில் பாடல்கள் ஈர்க்கவில்லை. 'பிடிச்சுருக்கா' என்ற பாடலைப் 'புதுமையாக' கொடுக்க முயன்று, நம்மைச் சோதிக்கிறார். பின்னணி இசையில் இரண்டாம் பாதியில் மட்டும் இறங்கி விளையாடியிருக்கிறார். ஆனாலும், சில காட்சிகளில் 'விடுதலை' படத்தின் பின்னணி இசையை நினைவூட்டுகிறார். சுசீந்திரனின் திரைக்கதையும், செல்லா செல்வத்தின் வசனங்களும் இறுதிக்காட்சியில் மட்டும் வாய் திறக்கிறது.

மார்கழி திங்கள் விமர்சனம்

90களின் பிற்பகுதியில் நடக்கும் கதைக்களத்திற்கு, 90களுக்கும் முந்தைய திரைமொழியைக் கையில் எடுத்திருக்கிறார் இயக்குநர். வாய்ஸ் ஓவர்கள், மேடை நாடக பாணியிலான கதாபாத்திர அறிமுகங்கள், காட்சியமைப்புகள், நடிகர்களின் செயற்கையான நடிப்பு, கதைக்களத்துக்கே செல்லாமல் நீளும் சுவாரஸ்யமற்ற திரைக்கதை, நேர்த்தியற்ற தொழில்நுட்ப முயற்சி... என முதல்பாதி முழுவதுமே முதிர்ச்சியற்ற திரையாக்கமே வெளிப்படுகிறது.

ஒரு கிராமத்தைக் கையில் எடுத்திருக்கும் இயக்குநர், அக்கிராமத்தின் மக்கள், அவர்களின் வாழ்வியல், தொழில், திருவிழா, சாதிகளுக்கு இடையிலான உறவு போன்ற புறச்சூழலையே பேசாமல், வெறும் முதன்மை கதாபாத்திரங்களை நம்பியே களமிறங்கியிருக்கிறார். அக்கதாபாத்திரங்களும் ஏற்ற இறக்கங்கள் இல்லாமல், வழக்கமான சினிமா கதாபாத்திரங்களாகவே வருகின்றன, பேசுகின்றன, போகின்றன. இதனாலேயே ஆக்‌ஷன் கட்டுக்கு இடையே சிக்கித் தவிக்கும் படமாக இது மாறிவிடுகிறது.

அதே சமயம், இதற்கு நேர்மாறாக, இறுதிப் பகுதியில் திரைக்கதையும், திரையாக்கமும் தூக்கத்திலிருந்து எழுந்து நின்று, நம்மையும் இருக்கையிலிருந்து நிமிர வைக்கின்றன. திரைக்கதை திருப்பங்கள், பரபரப்பிற்குத் தேவையான பின்னணி இசை, கவிதா கதாபாத்திரத்தின் ஆக்ரோஷமான நடிப்பு எனக் கடைசி 15 நிமிடங்கள் மட்டுமே விறுவிறுப்பைத் தருகின்றன.

மார்கழி திங்கள் விமர்சனம்

கிராமங்களில் நிலவும் சாதிய ஆதிக்கம், பெண்களைச் சுற்றிப் பின்னப்படும் சாதிய கட்டுமானம், ஆணவக் கொலை போன்றவற்றைக் கருப்பொருளாக எடுத்துக்கொண்ட இயக்குநரைப் பாராட்டலாம். ஆனால், இறுதிக்காட்சியில் பிரதான கதாபாத்திரம் எடுக்கும் முடிவை ஆமோதிக்கும் வகையில் படத்தை முடித்திருப்பது இயக்குநர் மற்றும் திரைக்கதை ஆசிரியரின் அரசியல் புரிதல் குறித்த போதாமையையே காட்டுகிறது.

கருப்பொருளுக்குத் தேவையான எதார்த்தமும் சுவாரஸ்யமும் நிறைந்த திரைக்கதையும், நேர்த்தியோடு ரசிக்கும்படியான திரையாக்கமும் இல்லாமல் போனதால், இந்த மார்கழி திங்கள் பிரகாசத்தைத் தராமல் டல் அடிக்கிறது.


from Movie Reviews
Umn news

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*