கிடா விமர்சனம்: இது கலைப் படமா, கமெர்ஷியல் படமா? மையப்புள்ளியில் சிக்கித் தவிக்கும் திரையாக்கம்!

0

ஏழ்மையில் வாடும் பெரியவர், நெருங்கி வரும் தீபாவளி பண்டிகைக்கு, தனது பேரன் விரும்பிக் கேட்ட புதுத்துணியை வாங்கித் தர நடத்தும் பாசப் போராட்டமே இந்த ‘கிடா’.

மதுரை மேலூருக்கு அருகில் இருக்கும் கிராமத்தில் செல்லையா (பூ ராம்) தனது மனைவி மீனம்மாள் (பாண்டியம்மா) மற்றும் பேரன் கதிருடன் (தீபன்) வாழ்ந்து வருகிறார். தீபாவளிக்கு 3 நாள்களே இருக்கும் சூழலில், தனது நண்பர்கள் பண்டிகைக் கொண்டாட்டங்களுக்குத் தயாராவதைப் பார்த்து கதிர் தனக்கும் புதுத்துணி வேண்டுமெனத் தாத்தாவிடம் கேட்கிறான். ஏற்கெனவே ஏழ்மையின் பிடியில் சிக்கியிருக்கும் செல்லையா, எப்படியாவது பேரனின் ஆசையை நிறைவேற்ற வேண்டுமென நினைக்கிறார். இதற்காக அவர் என்ன செய்கிறார், பேரனின் ஆசை நிறைவேறியதா என்பதே 'கிடா' படத்தின் கதை.

கிடா விமர்சனம்

கடன் வாங்கச் செல்லும் இடங்களில் ஏமாற்றத்தையும், தனது பேரன் அளவுக்கு மீறி ஆசைப்படுகிறான் என்று மற்றவர்கள் இழிவு செய்யும் இடத்தில் வைராக்கியத்தையும் காட்டி தனது தேர்ந்த நடிப்பினை வெளிப்படுத்தி இருக்கிறார் மறைந்த நடிகர் 'பூ' ராம். பேரனாக நடித்துள்ள மாஸ்டர் தீபனிடம் இயக்குநர் இன்னும் சிறந்த நடிப்பை வாங்க முயற்சி செய்திருக்கலாம். கறி வெட்டும் வெள்ளைச்சாமி கதாபாத்திரத்தில் வரும் காளி வெங்கட், மதுவினால் ஏற்படும் தள்ளாட்டம், கிராமத்து லந்து, கறிக்கடை வைக்கப் போராட்டம் என வெள்ளந்தி மனிதராகக் கன கச்சிதமாகப் பொருந்திப் போகிறார். குறிப்பாக க்ளைமாக்ஸ் காட்சியில் குற்றவுணர்வுடன் நன்றி சொல்லும் காட்சி அவரது சிறந்த நடிப்புக்கு உதாரணம்.

இவர்கள் தவிர காளி வெங்கட்டின் மனைவியாக வரும் லட்சுமி, பாட்டியாக நடித்துள்ள பாண்டியம்மா தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பாத்திரங்களுக்கு நியாயம் செய்திருக்கிறார்கள். காதல் ஜோடிகளாக வரும் ஜோதி - பாண்டி ஆகியோரின் நடிப்பில் செயற்கைத்தனம் எட்டிப்பார்க்கிறது. திருடர்களாக வரும் நான்கு பேர் கொண்ட நகைச்சுவை கூட்டணி சில இடங்களில் சிரிக்கவும் வைக்கிறார்கள்.

ஒளிப்பதிவின் தரத்தில் சில குறைகள் தெரிந்தாலும், இரவு நேரக் காட்சிகளில் சிறப்பான ஒளியுணர்வை தர முயற்சி செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் எம்.ஜெயபிரகாஷ். இருப்பினும் ஸ்லோமோஷன் காட்சிகள், பழைய சிடி கேஸட்கள் சிக்கிச் சிக்கி ஓடுவது போன்ற வடிவமைப்பு போன்றவை என்ன விதமான காட்சியமைப்பு என்பது விளங்கவில்லை.

கிடா விமர்சனம்

அதே போலப் படத்தின் நீளத்தையும் படத்தொகுப்பாளர் ஆனந்த் ஜெரால்டின் இன்னும் கத்திரி செய்திருக்கலாம். பின்னணி இசையும், பாடல்களும் பெரிதாக ஈர்க்கவில்லை. கறிக்கடை, ஊருக்கு வெளியே தனியான குடிசை எனக் கலை இயக்குநர் கே.பி.நந்து தனது பணியைக் குறை சொல்ல முடியாத வகையில் செய்துள்ளார்.

கதையின் தொடக்கத்திலேயே க்ளைமாக்ஸ் காட்சியினை வைத்துத் தொடங்கிய விதம் இப்படத்திற்குப் பெரும் பின்னடைவு. திரைக்கதையில் இரு மைய கதாபாத்திரங்களும் வெவ்வேறு திசையில் பயணம் செய்து ஒரு புள்ளியில் இணைவதே இப்படத்தின் முக்கிய காட்சி. ஆனால் அதைப் படத்தின் தொடக்கத்தில் வைத்தது, அடுத்து என்ன என்கிற சுவாரஸ்யத்தைக் குறைத்து விடுகிறது.

இது பழைய கதைக்களம் என்றாலும் கிராமத்தின் நிலப்பரப்பையும், அதன் யதார்த்த தன்மையையும் புதிதாகத் திரைமொழியில் வெளிப்படுத்த ஒரு நல்ல வாய்ப்பு இருந்தது. ஆனால் இயக்குநர் அந்த வாய்ப்பைத் தவறவிட்டுள்ளார். கலைப்படத்திற்கான அழகியலும் இல்லாமல், கமர்ஷியல் படத்திற்குரிய சுவாரஸ்யமும் இல்லாமல் ஒருவித மையப்புள்ளியில் நின்று தவிக்கிறது படம்.

பூ ராம் கடன் கேட்கச் செல்வது, அங்கே கடன் தர மறுப்பது போன்ற காட்சிகள் மட்டுமே மீண்டும் மீண்டும் வந்து முதல்பாதியை ஆக்கிரமிக்கின்றன. மறுமுனையில் காளி வெங்கட் ஆடு வாங்க அலைவது, எங்குத் தேடியும் ஆடு கிடைக்காமல் போவது என்று இரண்டாம் பாதியை நகர்த்தி இருக்கிறார்கள்.

கிடா விமர்சனம்

முதல் காட்சியிலேயே க்ளைமாக்ஸ் தெரிந்ததால் இந்த இரண்டு பயணமும், கூட்டமான பேருந்தில் நீண்ட தூரம் நின்று கொண்டே சென்ற பயணத்தின் உணர்வைத் தந்து நம் பொறுமையைச் சோதிக்கிறது. இதில் இரு காதல் ஜோடிகள் வீட்டை விட்டு ஓடிச் செல்லத் திட்டமிடுவதாக வைக்கப்பட்ட காட்சிகள் கதையில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

ஒட்டுமொத்தமாக ஒரு குறும்படத்தின் கதைக்களத்தை வைத்துக்கொண்டு, அதை முழுப்படமாக இழுத்துச் சொல்ல முயற்சி செய்திருக்கிறார்கள். அதிலும் திரைக்கதை மிகவும் யூகிக்கக்கூடிய வகையில் இருப்பதினால், இந்த `கிடா' விருந்து நம் வயிற்றையும் நிரப்பாமல், மனதையும் நிரப்பாமல் திருப்தியில்லா உணர்வோடு எழுந்து வர வைக்கிறது.


from Movie Reviews
Umn news

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*