
மூன்று பெண் சூப்பர்ஹீரோக்கள் ஒன்றிணைந்து உலகை, இல்லை இல்லை பேரண்டத்தையே காக்கும் அதிரடி சாகசமே இந்த `The Marvels'.
பேரண்டத்தைக் காக்கும் பொறுப்பிலிருக்கும் கரோல் டேன்வர்ஸ் எனும் கேப்டன் மார்வெல் (பிரை லார்சன்), ஒரு நாள் சந்தேகத்துக்கு இடமான ஒரு வார்ம்ஹோலை ஆராய்ச்சி செய்யப் போக, அங்கே நடக்கும் நிகழ்வுகளால் அவரின் சக்திகளும் மோனிகா ராம்ப்யூ (டெயோனா பேரீஸ்) மற்றும் கமலா கான் எனும் மிஸ்.மார்வெல் (இமான் வெல்லானி) ஆகியோரின் சக்திகளும் பின்னிப் பிணைந்து விடுகின்றன. ஒவ்வொரு முறை அவர்கள் தங்களின் சக்திகளைப் பயன்படுத்தும்போதும் டெலிபோர்டேசன் நிகழ்ந்து மூவரும் தங்களின் இடங்களைத் தங்களை அறியாமலேயே மாற்றிக்கொள்கின்றனர்.
இதனிடையே கேப்டன் மார்வெல் முன்பு செய்த ஒரு தவறு, கிரி (Kree) இனத்திலிருந்து ஒரு பெரும் எதிரியை அவருக்கு எதிராக உருவாக்கிவிடுகிறது. கேப்டன் மார்வெல்லால் தன் ஹாலா கிரகம் (HALA) இழந்த அனைத்தையும் இந்தப் பேரண்டத்திலிருந்து பிடுங்க வீறுகொண்டு வருகிறார் அந்த எதிரி. புதிதாக உருவாகியுள்ள இந்த விநோத சக்தியைக் கட்டுக்குள் கொண்டு வந்து மூன்று பெண் சூப்பர்ஹீரோக்களும் அந்த எதிரியிடமிருந்து இந்தப் பேரண்டத்தைக் காத்தார்களா என்பதே இந்தப் படத்தின் கதை.
முதலில் ஒரு டிஸ்கி...
ஐ.சி.யூ-வில் அட்மிட்டாகும் அளவுக்குப் பரிதாபமான நிலையிலிருக்கும் MCU-யின் 33வது படம். எந்த ஃபேஸ் இது என்பதே புரியாத அளவுக்கு மார்வெல்லிடமிருந்து வெப் சீரிஸ்களும் படங்களும் குவிந்த வண்ணமிருக்கின்றன. 'இதைப் பார்க்கணும்னா, அதைப் பார்த்தாதான் புரியும்... அதையும் அப்படியே பார்க்கக்கூடாது, இப்படி ரிவர்ஸ்ல ஓட்டிப் பார்க்கணும்' என்றெல்லாம் ரணகள ரூல்ஸ் போடும் அளவுக்கு கன்டென்ட்களை அள்ளிவீசிக் கொண்டிருக்கிறது டிஸ்னி.
இப்படியான சூழலில் கேப்டன் மார்வெல்லின் இரண்டாவது படமாக வந்திருக்கும் இதைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் குறைந்தபட்சம் கேப்டன் மார்வெல் தோன்றிய முதல் படத்தையும், கமலா கானின் சாகசங்களைச் சொன்ன மிஸ்.மார்வெல் சீரிஸையும் பார்த்தாலே போதுமானது. இன்னும் தெளிவாகப் புரியவேண்டுமென்றால் மோனிகா ராம்ப்யூ உருவான 'வாண்டா விசன்' தொடரையும் நிக் ஃப்யூரியின் 'சீக்ரெட் இன்வேஷன்' தொடரையும் பார்த்துவிடுங்கள். ஒருவேளை நீங்கள் ஃபர்ஸ்ட் பென்ச் ஸ்டூடண்ட் என்றால் எல்லா மார்வெல் படைப்புகளையும்தான் பார்த்துவிடுங்களேன்!
பேக் டு விமர்சனம்...
கரோல் டேன்வர்ஸ் என்னும் கேப்டன் மார்வெல்லாக பிரை லார்சன். இந்த ஃபேஸ் முழுவதையும், இனி மார்வெல்லின் மொத்த எதிர்காலத்தையும் தாங்கி நிற்கப்போகும் பாத்திரம் என்றாலும் அந்தச் சுமை தெரியாதவாறு இயல்பாகவே ரசிக்க வைக்கிறார். மோகினா ராம்ப்யூ என்ற கதாபாத்திரத்தின் முதிர்ச்சிக்கு ஏற்றவாறு அழுத்தமான முத்திரையைப் பதிக்கிறார் டெயோனா பாரீஸ். ஆனால் இவர்கள் இருவரையும்விட, தன் துடிப்பான குறும்பு நடிப்பால் நம்மை ஈர்ப்பது கமலா கானான இமான் வெல்லானிதான். கரோல் டேன்வர்ஸை முதலில் பார்க்கும்போது காட்டும் அந்த ஆச்சர்யம், சண்டைக் காட்சிகள் ரிஸ்க் என்றாலும் தயங்காமல் களமிறங்கி சாகசங்கள் செய்யும் துணிச்சல் என இந்தப் படத்துக்கு ஒரு பக்காவான பேக்கேஜ் இந்த கமலா கான்! சொல்லப்போனால் இந்த மூன்று பிரதான கதாபாத்திரங்களின் கெமிஸ்ட்ரிதான் இந்தப் படத்தை ரசிக்கும்படி மாற்றியிருக்கிறது.
சாமுவேல் ஜாக்சனாக நிக் ஃப்யூரி. சாரி சாரி, நிக் ஃப்யூரியாக சாமுவேல் ஜாக்சன், தன் வழக்கமான பணியைச் சிறப்பாகச் செய்திருக்கிறார். ஆனால், விண்வெளியிலேயே ஓட்டை என்னும் அளவுக்குப் பெரிய பிரச்னை என்றாலும் 'அந்த 11-ம் நம்பர் ஸ்பேனர் எடுங்க' என்பதாக கூல் மோடிலேயே இவர் டீல் செய்வதால் பிரச்னையின் பதைபதைப்பு, அதன் வீரியம் எதுவுமே நமக்குச் சரியாகக் கடத்தப்படவில்லை. வில்லி சூப்ரிமர் டார் பென்னாக ஜாவி ஆஸ்டன் தன் ஒற்றை பரிமாண நடிப்பால் நம் வெறுப்பை மட்டுமே சம்பாதித்துக் கொள்கிறார். முகத்திலும் கோபத்தைத் தவிர வேறு எதுவும் வரமாட்டேன் என்று அடம்பிடிக்கிறது. ரொம்ப கோவக்காரங்களா இருப்பாங்களோ!
முதல் பாகத்தில் கேப்டன் மார்வெல் என்ற அந்தப் பரிணாமத்தைவிட, கரோல் டான்வெர்ஸ் என்ற அதன் மனித வெர்ஷனின் பிரச்னைகள், பாசமிகு நண்பர்கள், குடும்பம் போன்றவற்றையே அதிகம் தொட்டிருப்பார்கள். இங்கேயும் அதற்கான ஸ்கோப் இருந்தும் `வண்டில ஏறுங்க... அப்படியே சண்டைப் போட்டுட்டே மெதுவா எமோஷன் ஆகிக்கலாம்' என்பதாகப் பல சென்டிமென்ட் காட்சிகளைப் போகிற போக்கில் கடந்து போகிறார்கள்.
அதுவும் மோனிகா முதன் முதலில் கரோலைச் சந்திக்கும் அந்த உணர்ச்சிமிகு தருணத்திலும்கூட அதை ரசிக்க விடாமல் கோபம் வருவதுபோல ஸ்டாண்ட் அப் காமெடி செய்து கொண்டிருக்கிறது கமலா கான் குடும்பம். இதனாலேயே பின்னொரு காட்சியில் மோனிகாவும் கரோல் டான்வெர்ஸும் ஒரு எமோஷனலான தருணத்தில் இருக்கும்போது நமக்கு மட்டும் அந்த உணர்வு வரமாட்டேன் என்று அடம்பிடிக்கிறது.
பாடல்களைத் தங்களின் மொழியாக வைத்திருக்கும் கிரகம், கூஸ் பூனையின் அட்டகாசங்கள், அதை வைத்து நிக் ஃப்யூரி செய்யும் ஐடியா, மூன்று சூப்பர்ஹீரோக்களின் பவர்கள் பின்னிப் பிணைவது என ஐடியாவாக ஈர்க்கும் சில விஷயங்களை எழுதி அரைப் பக்கத்தை நிரப்பிவிடலாம். ஆனால் மீதிப் பக்கத்தை நிரப்ப ஸ்டன்ட் காட்சிகள் மட்டுமே போதுமானதா என்ற கேள்வி எழாமல் இல்லை.
இந்தக் குறையை மறக்கடிக்க பெரும் முயற்சி எடுத்திருக்கிறது படம் ஆரம்பித்து 15 நிமிடங்களுக்குப் பிறகு வரும் அந்த ஸ்டன்ட் காட்சி. மூவரும் இடம் மாறுகிறார்கள், தங்களின் சக்திகளை உபயோகப்படுத்த முடியாமல் திணறுகிறார்கள் என்பதாகக் கட்டமைக்கப்பட்டிருக்கும் அந்த சீக்குவன்ஸ் ஜாலி பட்டாசு! போகப் போக அதே ஸ்டன்ட் மோடு, பல்வேறு பரிணாம வளர்ச்சியை அடைந்து அட்டகாசமான ஓர் அழகியல் விஷயமாக மாறுவது டெக்னிக்கலாக சிறப்பான ட்ரீட்!
சியான் பாபிட்டின் ஒளிப்பதிவு விண்வெளிக் காட்சிகளை 3டியில் பார்க்கும்போது விஷுவலாக அட்டகாசமான விருந்து. அதுவும் பேரண்டத்தில் நட்சத்திரங்கள் மட்டும் ஜொலிக்க அதற்கு முன்னிலையில் ஒரு கதாபாத்திரம் மட்டும் மிதந்துவரும் ஷாட்கள், கூஸ் உள்ளிட்ட பூனைப் படை ஜீரோ கிராவிட்டியில் மிதக்கும் அந்தக் காட்சி, விண்வெளியில் விழும் ஓட்டை, சூரியன் வரும் ஷாட்கள் எனத் தொழில்நுட்ப ரீதியாக மிரட்டியிருக்கிறது படக்குழு. சமீபமாக 'கிராபிக்ஸ் முடிக்காமயே படம் ரிலீஸ் பண்றாங்க' என மார்வெல் மீது விழுந்த அந்தக் கறையை இந்தப் படம் இன்க் ரப்பர் வைத்து அழிக்க முயன்றிருக்கிறது. லாரா கார்ப்மேனின் பின்னணி இசை மூன்று ஹீரோக்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து ஒலித்து, படத்துக்கும் தேவையானதைச் செய்திருக்கிறது.
அதே சமயம், தன் கிரகத்தை அழித்ததற்காக அதை மீட்டெடுக்கவும், பழிவாங்கவும் வருகிறார் வில்லன் பாத்திரம் என்ற வழக்கொழிந்துபோன டெம்ப்ளேட் ஒன்லைன் வெளியே தெரியாமல் இருக்க, விண்வெளியில் ஓட்டை, யுனிவர்சல் ஆயுதம், குவாண்டம் என்டேங்கிள்மென்ட் (Quantum Entanglement) என இஷ்டத்துக்கு முறுக்கு சுற்றியிருக்கிறார்கள். இதனாலேயே ஒரு கட்டத்தில் 'இந்த இங்கிலீஷ் எல்லாம் பேசாத, புரியற மாதிரி சொல்லு... ஸ்டன்ட் பண்ணுவியா, மாட்டியா?' என 'முதல்வன்' ரகுவரன் ரேஞ்சுக்கு நம்மை பன்ச் பேச வைக்கிறது திரைக்கதை.
சமீபத்திய மார்வெல் படங்களில் `கார்டியன்ஸ் ஆஃப் தி கேலக்ஸி - வால்யூம் 3' மட்டும் குரூப்ல டூப் (ஒரிஜினல்) என்பதாக நம்மை ரொம்பவே ரசிக்க வைத்தது. அந்த லிஸ்ட்டில் இந்த `தி மார்வெல்ஸ்' படம் சென்று சேராது என்றாலும் நிச்சயமாகத் தோல்வியடைந்த படங்களின் லிஸ்ட்டிலும் சேராது. இப்போதிருக்கும் ஒரே பயம் என்னவென்றால் இப்படியான ஆவரேஜ் படங்கள் என்பதாக ஒரு புது லிஸ்ட்டை மார்வெல் அடுத்ததாக உருவாக்கிவிடக்கூடாது என்பது மட்டும்தான்!
from Movie Reviews
Umn news
