
படம் ஆரம்பித்த முதல் 15 நிமிடங்களிலேயே கதையைச் சொல்லிவிடும் யுக்தியை நாம் பார்த்திருப்போம். ஆனால் படம் முடிகிற கடைசி 15 நிமிடங்களில் கதை சொல்லுகிற வித்தியாசமான யுக்தியைப் பார்த்ததுண்டா? அப்படியொரு வித்தியாசமான முரட்டு முயற்சியே இந்த `ரெய்டு' (Raid).
'ஸ்பாய்லர் சொல்லாதீங்க ப்ரோ!' என்றாலும் க்ளைமாக்ஸ் காட்சிக்கு முன்னாள் வருகின்ற கதையைச் சொல்வதைத் தவிர எங்களுக்கும் வேறு வழி தெரியவில்லை. போலீஸ் அதிகாரியான பிரபாகரன் (விக்ரம் பிரபு) ரவுடிகளைப் பந்தாடுகிறார், இதனால் ஆத்திரமடைந்த வில்லன்கள் அவரது காதலியை (ஸ்ரீ திவ்யா) கொன்று விடுகிறார்கள். அதற்கு நாயகன் எப்படிப் பழிவாங்குகிறார் என்பதே 'ரெய்டு' படத்தின் கதை. (இதுல என்னங்க ஸ்பாய்லர் சொல்றதுக்கு இருக்கு?!)
கதைக்குத் தேவையான நடிப்பைச் சென்ற படத்தில் யதார்த்தமாக இறுகப் பற்றியிருந்த விக்ரம் பிரபு, இப்படத்தில் கதையே இல்லாததால் எதைப் பற்றிக்கொள்ள வேண்டும் என்பதில் திண்டாடி இருக்கிறார். ‘பப்ஜி’ விளையாட்டில் சட்டை மாற்றுவது போல போலீஸ் உடை, ‘டீ’ ஷர்ட் என உடைகளை மாற்றி, கையில் வித்தியாசமான துப்பாக்கிகளைத் தூக்கிக் கொண்டு ஓட விட்டிருக்கிறார்கள். பாவம்! அவரது இன்ட்ரோ பாடலில் "என்கிட்ட மாட்டாத காணாம போயிருவ" என்கிற பாடல் வரிகளைப் படக்குழுவினர் குறியீடாக அவருக்கு மட்டுமல்ல பார்வையாளர்களான நமக்கும் சேர்த்தே வைத்தார்களா என்பதெல்லாம் அவர்களுக்கே வெளிச்சம். இந்த வார்னிங் வெகு நாள்களுக்குப் பின் திரையில் பார்த்த ஸ்ரீ திவ்யாவுக்கும் பொருந்தும்.
மற்றொரு நாயகியாக வரும் அனந்திகா, வில்லன் ரிஷி ரித்விக் ஆகியோர் இப்படத்தில்தான் நடித்துப் பழகியுள்ளார்கள் போல! முறைத்துக் கொண்டே பீர் குடிப்பது, சிகரெட் ஊதுவது மட்டுமே வில்லன் நடிப்பில் சேராது பாஸு! இதுதவிர சிட்டு, காக்ரோச், அங்கிள் (பெயரே அதுதான்) என்னும் கதாபாத்திரங்களில் கொடூர வில்லன்களாக சௌந்தர்ராஜன், டானி, வேலு பிரபாகரன் ஆகியோர் வந்து போகிறார்கள். இவர்களின் நடிப்பு தொலைக்காட்சிகளில் வரும் க்ரைம் தொடர்களில் போடப்படும் சித்திரிக்கப்பட்டவை ரகம்.
தேவையில்லாத குளோஸ் அப்கள், நகராத கேமரா கோணங்கள் என்று ஒளிப்பதிவாளர் கதிரவன் பழைய படங்களுக்கே உரியப் பாணியில் ஒளிப்பதிவைக் கையாண்டுள்ளார். இப்படி ஒரு திரைக்கதைக்கு எப்படிப் படத்தொகுப்பு செய்வது எனப் படத்தொகுப்பாளர் மணிமாறன் திணறியிருக்கிறார். ஆனால் அதற்காகப் பழைய கல்யாண வீடியோவில் வரும் கீழிருந்து மேல், வலமிருந்து இடம் என நகரும் ஆதிகாலத்து டிரான்சிஷன் முறையைத் தவிர்த்திருக்கலாம்.
அதே போல வழக்கமான 'படத்தின் நீளத்தைக் கத்திரி செய்திருக்கலாம்' என்ற விமர்சன வரியைச் சொல்வதற்குக் கூட நமக்குத் தயக்கமாகத்தான் இருக்கிறது. காட்சிகள்தான் இப்படிச் சோதனை என்றால் பாடல்களும், பின்னணி இசையும் வேதனை! சாம்.சி.எஸ் - நீங்க வரணும் பழைய பன்னீர் செல்வமா மீண்டும் வரணும்.
படம் ஆரம்பித்து சிறிது நேரத்தில் முதன்மை வில்லன்கள் என்று அறிமுகப்படுத்தப்பட்ட எல்லோரையும் ஹீரோ கொன்றுவிடுகிறார். ஆனால் மீண்டும் அதே வில்லன்கள் மீண்டும் வருகிறார்கள். பிறகுதான் தெரிகிறது நாம் பார்க்கப் போவது பிளாஷ்பேக் என்று. இதில் வித்தியாசமான பெயர்களை வைத்து வரும் வில்லன்களை விக்ரம் பிரபு ஒன்று அடித்துக் கொல்கிறார், இல்லாவிட்டால் வசனம் பேசிக் கொல்கிறார்.
ஆம், படமே 'மண்ணு, பொண்ணு, பொன்னு’ என்று ரைமிங் வசனத்தோடுதான் ஆரம்பிக்கிறது. கதைக்கும் இந்த வசனத்துக்கு என்ன சம்பந்தம் என்று யோசித்து முடிப்பதற்குள்ளே 'நான் சும்மா வந்தா விருந்தாளி, உன்னைப் பார்க்க வந்தால் நீ காலி', 'எல்லாரும் சொந்தக் காலில் நிக்கிறாங்க. நீ போன் கால்ல நிக்கிற', 'ஆண்டவன் உன் தலையெழுத்தை பென்ல எழுதி இருக்கலாம். ஆனா நான் Gun-ல எழுதுவேன்', ‘ஆம்பளன்னா ரத்தம் இருக்கணும், அது சுத்தமா இருக்கணும்’, ‘என் கண்ணுல இருந்தும் யாரும் தப்பிச்சது இல்ல; என் Gun-ல இருந்து யாரும் தப்பிச்சது இல்ல’ என்று அடுத்தடுத்த வசனங்களால் திக்குமுக்காட வைக்கிறார் வசனகர்த்தாவாக மட்டும் இப்படத்துக்குப் பங்களித்திருக்கும் இயக்குநர் முத்தையா.
பெண்களுக்கு எதிராக நடக்கும் பிரச்னைகளுக்குப் பொங்குவதாக எடுக்கப்பட்ட அதே படத்தில், "பிரியாணி நல்லா இருந்தா அம்மா ஞாபகம் வரும், பிரியாணி நல்லா இல்லனா அத செஞ்சவன் அம்மா ஞாபகம் வரும்" என்ற முகம் சுளிக்க வைக்கும் வசனங்களும், பெண்களைப் போகப்பொருளாகச் சித்திரிக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக ஹீரோ கல்யாணத்திற்குப் பெண் பார்க்கும் காட்சியில் 'நான் பர்மனெண்டா சமையல் பண்றதுக்கு ஆள் பார்க்கிறேன்' என்ற பூமர் வசனம் அபத்தக் குவியல்களில் ஒரு சாம்பிள். ‘நானே ரவுடி’ என்று குற்றவாளிகளை விடப் பல இடங்களில் கதாநாயகன் கொடூரமாக நடந்துகொள்வதை எல்லாம் என்னவென்று சொல்வது?!
மொத்தத்தில் திரைக்கதை என்கிற பெயரில் யாரோ ஒருவரைப் போட்டு அடிப்பது, அபத்த வசனங்கள் பேசுவது, பிறகு பாட்டு போடுவது, அதையே மீண்டும் மீண்டும் செய்வது எனத் தலைவலி தைலத்தைத் தேடி ஓட வைத்திருக்கிறது இந்த ‘ரெய்டு’.
from Movie Reviews
Umn news
