
விஜய் டிவியின் ஹிட் ஷோக்களில் ஒன்றான `குக்கு வித் கோமாளி'க்குப் போட்டியாக சன் டிவி `டாப் குக்கு டூப் குக்கு' நிகழ்ச்சியை இறக்கி விட்டிருக்கிறது. நிகழ்ச்சியின் புரொமோ வெளியாகியிருக்கும் நிலையில், முக்கால்வாசி போட்டியாளர்கள் இதுவரை விஜய் டிவியின் கம்பெனி ஆர்ட்டிஸ்டுகள் எனச் சொல்லப்பட்டவர்கள்தான்.
மோனிகா பிளஸி, 'கடைக்குட்டி சிங்கம்' தீபா எனப் பலரையும் இழுத்து வந்திருக்கிறார் பட். எனவே, என்னதான் 'நாங்கள் அந்த நிகழ்ச்சிக்குப் போட்டியில்லை' என 'டாப் குக்கு டூப் குக்கு'வைத் தயாரிக்கும் மீடியா மேஷன் சொன்னாலும், அது வெளிப்பேச்சுதான்.
சீரியலோ, ரியாலிட்டி ஷோவோ தமிழ்த் தொலைக்காட்சிகளில் காலங்காலமாக ஈயடிச்சான் காபி கதைதான். விஜய் டிவியில் 'கலக்கப் போவது யாரு' வந்ததும் சன் டிவி 'அசத்தப் போவது யாரு' கொண்டு வந்தது. அங்கு 'சூப்பர் சிங்கர்' என்றால் இங்கு 'சன் சிங்கர்'. சீரியல்களிலும் சன் டிவியில் 'லக்ஷ்மி ஸ்டோர்ஸ்' ஒளிபரப்பாக, விஜய் டிவியில் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' வந்தது. விஜய் டிவியில் 'ராஜா ராணி' என்றால் ஜீ தமிழில் அதே கதையில் 'செம்பருத்தி'. அதே வரிசையில்தான் இப்போது இந்த சமையல் ரியாலிட்டி ஷோவும்.
ஒரு காலத்தில் சன் டிவியில் வந்த மதுரை முத்துவை இப்போது விஜய் டிவி தனது ஆளாக்கி 'குக்கு வித் கோமாளி'யில் இறக்க, 'எங்ககிட்ட ஆளில்லையா' என ஜி.பி.முத்துவை இறக்கி விட்டிருக்கிறது சன் டிவி. மீடியா மேஷன் கு.வி.கோ.யில் கே.பி.ஒய். பாலா வந்தது போல இங்கு கே.பி.ஒய். தீனா.
சரி, இப்போது மேட்டருக்கு வருவோம்.
சன் டிவி நிகழ்ச்சியின் புரொமோவில் "நாங்க மட்டுமில்ல, செலிபிரிட்டிகள், செஃப்னு இன்னும் வர இருக்காங்க" என வெங்கடேஷ் பட் சொல்லியிருந்தார் இல்லையா, 'அவங்கெல்லாம் யாருப்பா' என்கிற விசாரணையைத் துவக்கினோம். கிடைத்த தகவல் என்னவோ பெரிய ட்விஸ்ட்தான். ஆம். நடிகர் வடிவேலுவைக் களம் இறக்கவிருக்கிறதாம் சன் டிவி.
தகவல் உண்மையா என நிகழ்ச்சி தொடர்பான சிலரிடம் பேசினோம்.
"ஆமாங்க, நடிகர் வடிவேலுவை 'டாப் குக்கு டூப் குக்கு' நிகழ்ச்சிக்கு கமிட் செய்திருக்கிறதா சொல்லப்படுகிற தகவல் உண்மைதான். என்ன காரணமோ தெரியலை, ஆரம்பத்துல அவர் கொஞ்சம் யோசிச்சதாகவும், ஆனா கேட்ட சம்பளம் கிடைக்கும்னு தெரிய வந்ததும் சம்மதம் சொல்லிட்டார்ன்னும் சொல்றாங்க. அவரை வைத்து புரொமோ ஷூட் கூட சில தினங்களுக்கு முன்னாடி தொடங்கிட்டதா தெரியுது.
வடிவேலுவுக்கு சம்பளமா பெரிய தொகை பேசப்பட்டிருப்பதாகவும் சொல்றாங்க. ஆனா குக்குகள்ல ஒருத்தரா சில எபிசோடுகள் மட்டும் வர்றாரா அல்லது செலிபிரிட்டியா அதாவது கெஸ்ட்டா வர்றாராங்கிற தகவலை மட்டும் படு சீக்ரெட்டா வச்சிருக்காங்க. எது எப்படியோ பெரிய ஓப்பனிங்கோட வருவார்னு மட்டும் தெரியுது'' என்றார்கள் அவர்கள்.
நடிகர் வடிவேலு இதற்கு முன் டிவியில் விருந்தினராகப் பல நிகழ்ச்சிகளில் வந்திருக்கிறார்தான் என்றாலும், இந்த நிகழ்ச்சியில் வருவதை வித்தியாசமாகத்தான் பார்க்கிறது சின்னத்திரை உலகம்.
எது எப்படியோ, புதிய தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பதால் கு.வி.கோ.வின் இந்த சீசன் முந்தைய சீசன்களைக் காட்டிலும் பிரமாண்டமாக இருக்க வேண்டுமென நினைக்கிறதாம் விஜய் டிவி. சன் டிவியோ, 'ரியாலிட்டி ஷோ'க்களிலும் தனி முத்திரை பதித்துவிடும் முடிவோடு இருக்கிறதாம்.
டி.ஆர்.பி யுத்தத்தில் யார் ஜெயிக்கப் போகிறார்கள் என்பது அடுத்த சில வாரங்களில் தெரிந்து விடும்.
from விகடன்
Umn news
