
மதத்தின் பெயரால் நிகழ்த்தப்படும் கொடுமைகளைத் தோலுரித்த பத்திரிகையாளரும் சீர்திருத்தவாதியுமான கர்சந்தாஸின் கதையைப் பேசுகிறது இந்த `மகாராஜ்'.
1850களில் மும்பை மாகாணத்தில் உள்ள ஒரு புகழ்பெற்ற கிருஷ்ண மடத்தில் கிருஷ்ணரின் தலைமுறையைச் சேர்ந்தவராகக் கருதப்படும் யதுராஜ் மகாராஜ் (ஜெய்தீப் அஹ்லவாத்) தலைவராக உள்ளார். அப்பகுதியில் உள்ள வைஷ்ணவ மத நம்பிக்கையாளர்கள் அவரை கிருஷ்ணரின் அவதாரம் போல எண்ணி வழிபடுகிறார்கள். அதே பகுதியில் வாழும் குஜராத்தைச் சேர்ந்த கர்சந்தாஸ் (ஜுனைத் கான்) கடவுள் நம்பிக்கை உள்ளவராக இருந்தாலும், சிறுவயது முதலே பிற்போக்கான மூடநம்பிக்கைகளைக் கேள்வி கேட்டு வருகிறார். அவர் வளர்ந்ததும் அவரது அத்தை மகள் கிஷோரியை (ஷாலினி பாண்டே) அவருக்கு மணம் முடிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. அப்போது அப்பெண்ணுக்கு 'பாத பூஜை' என்ற பெயரில் யதுராஜ் மகாராஜ் பாலியல் தொல்லை கொடுக்கிறார்.
இது மதத்தின் பெயரிலான பாலியல் சுரண்டல் என்பதைக்கூட அறியாத அப்பெண்ணும், அவரின் குடும்பமும், மத நம்பிக்கையாளர்களும் அதைப் புனிதமான நிகழ்வாகக் கருதுகிறார்கள். இதைத் தட்டிக் கேட்க கர்சந்தாஸ் வெகுண்டெழும்போதுதான், ஊரில் பல பெண்கள் பல ஆண்டுகளாக யதுராஜ் மகாராஜால் பாலியல் சுரண்டலுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை அறிகிறார்.
மத ரீதியான பலமும், அரசியல்/பண பலமும் உள்ள மதத் தலைவரான யதுராஜ் மகாராஜுக்கு எதிராக தன் எழுத்துகளாலும், தன் பேச்சாலும் போர் தொடுக்கிறார் கர்சந்தாஸ். இறுதியில் குற்றவாளிகளைச் சிறையில் அடைத்தாரா, பெண்களுக்கான நீதியை அவரால் பெற்றுத் தர முடிந்ததா, மத நம்பிக்கையாளர்களுக்கு அவர் சொல்லிக் கொடுக்கும் பாடம் என்ன என்பதுதான் இந்த நெட்ப்ளிக்ஸ் படத்தின் கதை.
துடிப்பான இளைஞனாகவும், காதலனாகவும் ஸ்கோர் செய்யும் ஆமிர் கானின் மகனும் அறிமுக நடிகருமான ஜுனைத் கான், உணர்வுப்பூர்வமான இடங்களிலும் ஆக்ரோஷமான தருணங்களிலும் டாட் பால்களே ஆடிக்கொண்டிருக்கிறார். தனியாளாக சில காட்சிகளைத் தூக்கி நிறுத்தினாலும், முழுப் படத்தையும் தாங்கி கரைசேர்க்கப் போராடுகிறார். ஆர்ப்பாட்டமில்லாத வில்லனாக தன் அநாயாசமான உடல்மொழியால் ஜெய்தீப் அஹ்லவாத் தொடக்கத்தில் மிரட்டுகிறார். ஆனாலும், அதே மீட்டரிலேயே எல்லா காட்சிகளிலும் வருவதால் வில்லனிஸத்தின் வீரியம் குறைந்து விடுகிறது. ஷாலினி பாண்டே, ஷர்வரி வாக், ஜெய் உபத்யாய் ஆகியோர் கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார்கள்.
க்ளோஸ் அப் ஷாட்களிலும், இண்டோர் லைட்டிங்கிலும் கவருகிறது ராஜீவ் ரவியின் ஒளிப்பதிவு. ஆனால், கதை நடக்கும் காலத்தைப் பிரதிபலிக்கும் பிரமாண்டமான ஷாட்களும் ப்ரேம்களும் இல்லாததால் ஒரு முழுநீளப் படத்திற்கான திரையனுபவம் மிஸ் ஆகிறது. ஸ்வேதா வெங்கட்டின் படத்தொகுப்பும், சன்சிட் பால்ஹரா - அன்கிட் பால்ஹரா கூட்டணியின் பின்னணி இசையும் தேவையான பங்களிப்பைச் செய்திருக்கின்றன. மடம், மடத்திற்குள் உள்ள அரங்குகள், அச்சு ஆபிஸ் போன்றவற்றில் சுபத்ரா சக்ரபோர்டி மற்றும் அமித் ராயின் கலை இயக்கம் கவனிக்க வைத்தாலும், தெருக்கள், வீடுகள் போன்றவற்றில் நிறையவே செயற்கைத்தனம் எட்டிப்பார்க்கிறது.
1862ஆம் ஆண்டு மும்பை நீதிமன்றத்தில் நடந்த 'மகராஜ் அவதூறு வழக்கை' மையமாக வைத்து, 2013-ம் ஆண்டு குஜராத்தி மொழியில் சௌரப் ஷா நாவல் ஒன்றை எழுதினார். அந்நாவலை அடிப்படையாக வைத்து, விபுல் மேஹ்தா மற்றும் ஸ்நேகா தேசாய் எழுதிய திரைக்கதையை, சித்தார்த் பி.மல்ஹோத்ரா திரைப்படமாக இயக்கியிருக்கிறார்.
மத நம்பிக்கைகளிலுள்ள தீவிரமான உள்விவகாரங்களைப் பேசுகிறது படம். அதை வசனங்களில் தைரியமாக விவாதிக்கும்போது கைதட்டலையும் பெறுகிறது. ஆனால், அதைக் காட்சிகளாக விவரிக்கும்போது மிகவும் தட்டையாக யூகிக்கும்படியாக சுவாரஸ்யமற்று போய்விடுகிறது. மதத் தலைவரின் கோர முகம், பாதிக்கப்படும் பெண்கள், வெகுண்டெழும் கதாநாயகன், நீதிமன்ற விவாதம் என நேர்கோட்டில் புதுமையில்லாத திரைக்கதையுடன் ஓடும் படம், முற்போக்கான வசனங்களால் மட்டுமே பார்வையாளர்களைப் பிடித்து வைத்திருக்கிறது. மேலும், மேடை நாடக பாணியிலான திரையாக்கமும் படத்திற்குப் பெரிய மைனஸ். கதாநாயகன் நடத்தும் பத்திரிகை, அதை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முறை போன்றவை மட்டும் சிறிது சுவாரஸ்யம் தருகின்றன.
மத நம்பிக்கையை அடிப்படையாக வைத்து உழைக்கும் மக்கள் பொருளாதார ரீதியாகச் சுரண்டப்படுவதையும், பெண்கள் பாலியல் ரீதியாகச் சுரண்டப்படுவதையும் படம் அம்பலப்படுத்துகிறது. ஆனால், இவற்றுக்குக் காரணமான அம்மதத்தின் அடிப்படைகளைக் கேள்வி கேட்காமல், அந்த அடிப்படைகளையே பெருமித அடையாளங்களாகக் கொண்டாடியபடி படம் முடிவது நகைமுரண்.
மதத்தின் பெயரிலான சுரண்டலைக் கேள்வி கேட்ட வகையில் பாராட்டைப் பெற்றாலும், மேடை நாடக பாணியிலான மேக்கிங்காலும், சுவாரஸ்யமற்ற திரைக்கதையாலும் இந்த `மகாராஜா' கஷ்டப்பட்டே அரியணை ஏற வேண்டியதாக இருக்கிறது.
from Movie Reviews
Umn news
