Ullozhukku Review: ஊர்வசி - பார்வதி மிரட்டல் நடிப்பு, பகீர் ட்விஸ்ட்; ஆனாலும் படத்தில் என்ன பிரச்னை?

0

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தின் குட்டநாடு பகுதியில் உடல்நலக்குறைவால் படுக்கையில் கிடக்கும் தன் மகன் தாமஸ்குட்டி (பிரஷாந்த் பிள்ளை) மற்றும் மருமகள் அஞ்சுவுடன் (பார்வதி) வாழ்ந்து வருகிறார் லீலாம்மா (ஊர்வசி). தன் காதலுக்கு மறுப்பு தெரிவித்து வலுக்கட்டாயமாக தாமஸ்குட்டிக்கு திருமணம் செய்து வைத்ததால் அரை மனதோடு திருமண வாழ்க்கையை கழித்தபடி, படுக்கையில் கிடக்கும் தன் கணவனுக்குச் சேவை செய்துவருகிறார் அஞ்சு. இந்நிலையில், கணவன் இறந்து போக, அவரின் உடலை நல்லடக்கம் செய்ய முடியாதபடி இடுகாட்டில் நீர் தேங்கி நிற்கிறது. இதற்கிடையே மாமியாரும் மருமகளும் ஆளுக்கொரு ரகசியத்தைத் தங்களுக்குள் புதைத்துக் கொண்டு பனிப்போர் நடத்துகிறார்கள். இறுதியில், சடலத்தை நல்லடக்கம் செய்தார்களா, இரு பெண்களும் மறைக்கும் ரகசியம் என்ன, இரு பெண்களின் வாழ்க்கையும் இறுதியில் என்னவாகிறது போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்லியிருக்கிறது இயக்குநர் கிரிஸ்டோ டாமியின் `உள்ளொழுக்கு' (Ullozhukku) திரைப்படம்.

Ullozhukku Review

மகனுக்காக உருகுவது, மருமகளுக்காக இரக்கப்படுவது, அப்பாவியாக அழுவது, வஞ்சத்தை மறைக்க முயல்வது, உடைந்து அழுவது எனப் பல அடுக்குகளைக் கொண்ட லீலாம்மா கதாபாத்திரத்திற்கு அழுத்தமான முதிர்ச்சியான நடிப்பால் உருவம் கொடுத்திருக்கிறார் ஊர்வசி. வயோதிகத்தால் வரும் உடல் நடுக்கம்கூட அக்கதாபாத்திரத்திற்கு வலுசேர்த்திருக்கிறது. இறுக்கமான மருமகளாகவும், ஒரு கட்டத்தில் வெகுண்டெழும் பெண்ணாகவும் தன் நடிப்பால் ஊர்வசியோடு போட்டிப்போடுகிறார் பார்வதி. சிறிது குழப்பமாக எழுதப்பட்ட இக்கதாபாத்திரத்தின் குறையை, முடிந்தளவிற்கு தன் நடிப்பால் மறக்கடித்திருக்கிறார். பிரஷாந்த் முரளி சிறிது நேரம் வந்தாலும், தேவையான பங்களிப்பைச் செய்திருக்கிறார். அர்ஜுன் ராதா கிருஷ்ணன், அலன்சியர், ஜெயா குரூப் ஆகியோரின் நடிப்பும் படு யதார்த்தம்!

ஷெஹ்னத் ஜலாலின் ஒளிப்பதிவு எந்நேரமும் பெய்துகொண்டிருக்கும் மழையைத் தேவையான இடங்களில் அழகியலாகவும் தேவையான இடங்களில் ஆபத்தாகவும் மாற்றிக் காட்சிப்படுத்தியிருக்கிறது. கதாபாத்திரங்களின் இறுக்கங்களைக் காட்ட வைக்கப்பட்ட க்ளோஸ் அப் ஷாட்களும் கோணங்களும் நல்லதொரு முயற்சி. ஆங்காங்கே வரும் ட்ரோன் ஷாட்களும் கவனிக்க வைக்கின்றன. படத்தின் திரைமொழிக்கு கிரன் தாஸின் படத்தொகுப்பு நியாயம் செய்திருக்கிறது என்றாலும், படத்தைச் செறிவாகச் செதுக்கி சுவாரஸ்யமாக்கத் தவறுகிறது.

Ullozhukku Review

சுஷின் ஷ்யாமின் பின்னணி இசை, கதாபாத்திரங்களின் மனவோட்டத்தைச் சிறப்பாகக் கடத்தி, காட்சிகளின் வீரியத்துக்கு ஏற்ப அதிரவும் செய்திருக்கிறது. தேவையான நிசப்தங்களும் நிர்ப்பந்தித்த பணியைச் செய்திருக்கின்றன. ஒரு கதாபாத்திரம் போலப் படம் முழுவதும் பயணிக்கும் மழையின் இரைச்சலை நேர்த்தியாக இணைத்த விதத்தில் கவனிக்க வைக்கிறது ஜெயதேவன் மற்றும் அனில் ராதாகிருஷ்ணனின் ஒலி வடிவமைப்பு.

தங்களின் கனவுகள் பிடுங்கப்பட்டு வலுக்கட்டாயமாகத் திருமணப் பந்தத்தில் தள்ளப்பட்ட இரு தலைமுறை பெண்களின் மனப்போராட்டத்தை வீரியமாகப் பேச முயன்றிருக்கிறார் 'Curry & Cyanide: The Jolly Joseph Case' ஆவணத்தொடர் இயக்குநர் கிறிஸ்டோ டோமி. போன தலைமுறையைச் சேர்ந்த லீலாம்மா, போலியான குடும்ப கௌரவத்தாலும், சமூக நிர்ப்பந்தங்களாலும், அந்தக் குடும்ப வாழ்கையிலேயே சிக்கிக்கொள்ள, மறுபுறம் அஞ்சு, அதை உடைத்து வெளியேற முயல்கிறார். இந்த இரு பெண்களுக்கு இடையிலான சில உரையாடல்கள் ஆழமாக எழுதப்பட்ட விதத்திலும், அதன் வழியாக சமூகத்தை கேள்விகேட்ட விதத்திலும் பாராட்டைப் பெறுகிறது படம்.

அதற்குத் திரைமொழியும், அழுத்தமான வசனங்களும் கைகொடுத்தாலும் வேறு சில பிரச்னைகள் எட்டிப் பார்க்கின்றன. குறிப்பாகத் திருப்பங்களும், அது தரும் அதிர்ச்சியும் பார்வையாளர்கள் மீது எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. காரணம் நிதானமான திரைக்கதை இறுக்கத்தைக் கடத்தாமல் அயற்சியை மட்டுமே தந்திருக்கிறது. இதுபோன்ற மெலோ டிராமாக்களில் கதாபாத்திரங்களின் நகர்வுகள் உண்மைக்கு மிக நெருக்கமாக இருக்க வேண்டும். அதைச் செய்யத் தவறுகிறது திரைக்கதை. இந்தக் குறைகளை முடிந்தளவிற்குப் போட்டிப்போட்டு நடித்து, குறைக்க முயன்றிருக்கிறது ஊர்வசி - பார்வதி கூட்டணி.

Ullozhukku Review

இறுதிக்காட்சியில் முக்கிய கதாபாத்திரங்கள் எடுக்கும் முடிவுகளுக்கு நியாயம் செய்யும் வகையில் காட்சிகள் இல்லாமல் போனதும் பெரிய மைனஸ். அதேபோல பிரச்னைக்குத் தீர்வைப் போல முன்வைக்கப்படும் இறுதிக்காட்சி இயக்குநரின் குழப்பமான பார்வையையே பிரதிபலிக்கிறது, ஒருவகையில் பிற்போக்காகவும் புலப்படுகிறது.

மொத்தத்தில் ட்விஸ்ட் அனுபவங்கள் கிடைத்தாலும், சிறந்த நடிப்பைப் பிரதான பாத்திரங்கள் தந்திருந்தாலும் ஒரு படமாக நம் கவனத்தைப் பிடித்து வைக்காமல், குழப்பமான முடிவுகள் எனும் பெருமழையில் அடித்துச் செல்லப்பட்டிருக்கிறது இந்தப் படைப்பு!


from Movie Reviews
Umn news

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*