.jpeg?w=280)
தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில் உள்ள திரையரங்கில் சாமானியன் திரைப்பட 100-வது நாள் வெற்றி விழா வெள்ளிக்கிழமை (ஆக.30) படத்தின் நாயகனான ராமராஜன் தலைமையில் பொதுமக்கள், ரசிகர்கள் முன்னிலையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
மக்கள் நாயகன் என்றழைக்கப்படும் நடிகர் ராமராஜன் 80, 90-களில் தமிழ் திரையுலகில் கொடி கட்டி பறந்தவர். அவர் நடித்த கரகாட்டக்காரன் திரைப்படம் தமிழகத்தின் பெரும்பாலான திரையரங்குகளில் 100 நாள்களை கடந்து ஓடி மாபெரும் வெற்றி பெற்றது. அப்படத்தில் வரும் செந்தில், கவுண்டமணி நடித்த “வாழைப்பழ காமெடி”, அப்படத்தின் பாடல்கள், இசை என அப்படத்தில் இடம்பிடித்த அனைத்துமே இப்படத்தை பட்டிதொட்டியெங்கும் பிரபலப்படுத்தின.

எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகரான ராமராஜன், தனது படத்தில் தனது குருவான எம்.ஜி.ஆரைப் போலவே எந்தக் காட்சியிலும் புகைப்பிடித்தோ, மது அருந்தியோ, சூதாடியோ சமூகத்துக்கு தீங்கிழைக்கும் வகையிலான எந்தக் காட்சியிலும் நடிக்கக் கூடாது என்பதை கொள்கையாகவே கொண்டு, அதனை நாளது தேதி வரை கடைப்பிடித்தும் வருகிறார்.
இந்நிலையில், சுமார் 12 ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் இருந்து பல்வேறு காரணங்களால் சற்று விலகியிருந்த, ராமராஜனின் திரையுலக வாழ்க்கையில் சமீபத்தில் வெளியான, `சாமானியன்' திரைப்படம், அவருக்குப் புதிய மைல்கல்லாக அமைந்துள்ளது. 12 ஆண்டுகளுக்கு பிறகு ராமராஜன் நடித்து வெளியானதால் இப்படத்தை, ராமராஜனின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில், தென்காசி மாவட்டம், ஆலங்குளம் டிபிவி மல்டிபிளக்ஸ் திரையரங்கில் ராமராஜனின் சாமானியன் திரைப்படம் 100 நாள்கள் ஓடியிருக்கிறது. இத்திரையரங்கம் முன்பு லெட்சுமி நாராயணா என்ற பெயரில் இயங்கியபோது, வெளியான மிக அதிக நாள்கள் ஓடிய, அதிக ரசிகர்கள் பார்த்து ரசித்த படம் கரகாட்டக்காரன் ஆகும். தற்போது, அதிநவீன தொழில்நுட்பங்களுடன் இத்திரையரங்கம் டிபிவி மல்டிபிளக்ஸ் என உருமாறிய பிறகு பல்வேறு திரைப்படங்கள் வந்திருந்தாலும், முதன்முதலாக 100 நாள்களை தாண்டி, ஓடிய படமாக சாமானியன் அமைந்திருக்கிறது.

சாமானிய மக்கள் “லோன்களை வாங்கிப் பின் லோல்படும்” பிரச்னை பற்றிய படம் என்பதால், அனைத்து தரப்பு மக்களுக்கும் இப்படம் சென்றடைய வேண்டும் என்று நடிகர் ராமராஜன் கேட்டுக்கொண்டதால், ஆலங்குளம் டிபிவி மல்டி பிளக்ஸ் திரையரங்க உரிமையாளர்கள் கருணாகரராஜா, வைகுண்ட ராஜா ஆகியோர் இப்படத்துக்கான டிக்கெட் கட்டணத்தை ரூ.50 ஆக குறைத்தளித்தனர். இதனால் ஏராளமான சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், சாமானியன் திரைப்படத்தை பார்த்தனர்.
.jpeg)
தனது படங்கள் இப்பகுதியில் நன்கு ஓடுவதால், நடிகர் ராமராஜனுக்கும் இப்பகுதி மக்கள் மீது மிகுந்த பாசம் உண்டு. சாமானியன் படம் வெளியான பின், படத்தின் 25-வது நாள், 50-வது நாள், 75-வது நாள் மற்றும் 100 நாள் விழா என இதுவரை 4 முறை இத்திரையரங்குக்கு நடிகர் ராமராஜன் வந்துள்ளார். மேலும், அருகில் உள்ள கிராமத்தில் உள்ள மக்கள் நாயகன் ரசிகர் மன்றங்களுக்கும் சென்ற அவர், அப்பகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, அப்பகுதியில் உள்ள கோயில்களில் சுவாமி வழிபாடும் செய்தார்.
இந்நிலையில், இப்படத்தின் 100-வது நாள் விழாவுக்கு வந்திருந்த நடிகர் ராமராஜன், திரையரங்கில் கேக் வெட்டி, படத்தின் வெற்றி விழாவைக் கொண்டாடினார். மேலும், டிக்கெட் விலையைக் குறைத்துக் கொடுத்து, குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட தன்னுடைய படத்தை, சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த அனைவரும் பார்க்க உதவிய திரையரங்க உரிமையாளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
.jpeg)
அப்போது, நடிகர் ராமராஜனுக்கு அப்பகுதியைச் சேர்ந்த அவரது ரசிகர் மாரியப்பன் என்ற தொழிலதிபரை, அப்பகுதியினர் அறிமுகம் செய்து வைத்தனர். நல்ல நிலையில் தொழில் செய்து கொடிகட்டி பறந்து வந்த மாரியப்பன் திடீரென தொழில் முடக்கம் ஏற்பட்டு, சுமார் ஒன்றரை கோடி ரூபாய் வரை கடனாளியாகி கடும் மன உளைச்சலில் அடுத்து என்ன செய்ய என தெரியாமல் இருந்தபோது, தற்செயலாக இப்படத்தை பார்த்துள்ளார். மீண்டும் ஒரு முறை வந்து பார்த்துள்ளார். இப்படத்தில் தெரிவித்துள்ளதுபோல, கடன் இல்லாமல் நிம்மதியாக வாழ்ந்தால் போதும் என எண்ணி, தனது சொத்துக்களையெல்லாம் விற்று, கடன்களை கட்டிவிட்டு, தற்போது கடனாளியாக இல்லாமல் சுதந்திர மனிதராக மகிழ்ச்சியுடன் நிம்மதியாக தொழில் செய்து வருவதாக விழாவில் தெரிவித்தது, அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்தது.
இவ்வாறு தனது படங்கள் மக்களை மகிழ்விப்பதுடன், மக்களிடம் மன மாற்றத்தையும் ஏற்படுத்துவதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் எனத் தெரிவித்தார். தொடர்ந்து, இந்த ரசிகர் வரும் ஞாயிற்றுக்கிழமை திரையரங்கில் காட்சியிடப்படும் திரைப்படத்துக்கான மொத்த டிக்கெட்களையும் வாங்கி, பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி இத்திரைப்படத்தை பார்க்க ஊக்கமளிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

12 ஆண்டுகளுக்கு பிறகு சிறிய பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட தனது படம் இவ்வளவு நாள்கள் ஓடியதற்கு, சுற்றுவட்டார கிராமப்புறத்தில் இருந்து வந்து படம் பார்த்து ஆதரவு தெரிவித்த பொதுமக்கள்தான் காரணம் எனவும், எவ்வித விளம்பரங்களும் இன்றி தற்போதைய காலகட்டத்திலும், தனது படம் 100 நாள்களை கடந்து வெற்றி பெற்றுள்ளது மிகப்பெரிய சாதனை எனவும், நடிகர் ராமராஜன் தெரிவித்தார்.
மேலும், ``இளையராஜா, கவுண்டமணி, செந்தில் மற்றும் நான் இணைந்து உருவான மிகப்பெரிய வெற்றிப்படமான கரகாட்டக்காரன் போல எதிர்காலத்தில் நல்ல கதை அமைந்தால், மீண்டும் அதேபோல ஒரு மாபெரும் வெற்றிப் படத்தை மக்களுக்குத் தருவோம்" எனத் தெரிவித்தார்.
from விகடன்
Umn news
