சட்டசபை தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. தி.மு.க, அ.தி.மு.க, மக்கள் நீதி மய்யம், நாம்தமிழர், அ.ம.மு.க என 5 முனை போட்டி நிலவுகிறது. இதில், பிரதான தி.மு,க, அ.தி.மு.க கூட்டணியில் வேட்பாளர்கள் பட்டியலில் பல்வேறு குளறுபடிகள் நடந்திருப்பதாக அந்தக் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அ.தி.மு.க கூட்டணியில் அந்த பிரச்னை நாளுக்கு நாள் வெடித்து வருகிறது. கோவை மாவட்டம் வால்பாறை தொகுதியை, அ.தி.மு.க கூட்டணியில் த.மா.கா எதிர்பார்த்திருந்தது.
Also Read: தினகரனின் வேட்பாளர் பட்டியல் முதல் வேலுமணி மீது தளவாய் சுந்தரத்தின் கடுப்பு வரை... கழுகார் அப்டேட்ஸ்
“த.மா.கா துணை தலைவர் கோவை தங்கம் அங்கு ஏற்கெனவே எம்.எல்.ஏ-வாக, தொகுதிக்குள் நல்ல பெயருடன் இருக்கிறார். எனவே, இந்தமுறை அவர் நின்றால் வெற்றி உறுதி” என்று சொல்லி அவர் வால்பாறையில் போட்டியிட ஏராளமானோர் விருப்பமனுவும் அளித்தனர். ஆனால், வால்பாறை தொகுதி த.மா.கா-வுக்கு ஒதுக்கவில்லை. இதனால், கோவை தங்கம் அதிருப்தியில் உள்ளார்.
வால்பாறையில் சுயேட்சையாக போட்டியிட திட்டமிட்டுள்ள கோவை தங்கத்திடம் பேசினோம், ``வால்பாறை மக்கள் குடும்பத்தில் ஒருவராக நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். 1980-ம் ஆண்டிலேயே இந்திராகாந்தி என்னை வால்பாறை தொகுதி வேட்பாளராக நியமித்தார். 2001-ம் ஆண்டு எனக்கு மீண்டும் வாய்ப்பளித்து, வால்பாறையில் வெற்றி பெற வைத்தனர்.
தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ.76 கூலியில் இருந்து, 4 ரூபாயை குறைத்துவிட்டனர். அப்போது வால்பாறையில் மிகப்பெரிய போராட்டம் வெடித்தது. நான் சட்டமன்றத்தில் அதுகுறித்து பேசி, அந்த உத்தரவை நீக்க வைத்தேன். அதன்பிறகும், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் சம்பள உயர்வுக்காக பல போராட்டங்களை நடத்தினேன்.
2006-ம் ஆண்டு மீண்டும் வால்பாறை தொகுதியில் போட்டியிட்டு வென்று, அதுகுறித்து சட்டசபையில் கண்ணீர்விட்டு பேசினேன். அப்போது, முதல்வராக இருந்த கருணாநிதி தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கான கூலியை உயர்த்தி உத்தரவிட்டார். 1997-க்கு பிறகு ஊதிய உயர்வு, பஞ்சப்படி அளிக்காமல் இருந்தனர்.
இதற்காக சட்டசபையில் சட்ட திருத்தத்தை கொண்டு வந்தேன். அதன்படி, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு கொடுக்காவிடின், சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினரை கைது செய்யலாம் என்ற சட்டத் திருத்தத்தை நிறைவேற்ற வைத்துள்ளேன்.
அதன்பிறகு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் பதவியில் இருந்து விலகி, த.மா.கா-வில் இணைந்தேன். அ.தி.மு.க கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தது. அப்போது, “வால்பாறை தொகுதியை எனக்கு கொடுக்காமல் இருப்பது நல்லதல்ல” என அ.தி.மு.க தொகுதி பங்கீடு கமிட்டியில் கூறினர். உடனே அமைச்சர் வேலுமணி அவர்களுடன் சண்டைக்கு போய்விட்டார்.
“எங்களுக்குள்ள சண்டை மூட்டி விடறீங்களா..? அவர் ஸ்டேட் லீடர். தாராபுரம், திரு.வி.க நகர், ஶ்ரீபெரும்புதூர்னு எங்க வேணாலும் நிக்கலாம். எங்க நின்னாலும், அவரை நம்ம ஜெயிக்க வைக்கலாம். வால்பாறைல நிக்கணும்’னு என்ன இருக்கு?” என அவர்கள் மீது பாய்ந்தார்.
அதற்கு தங்கமணி, “தாராபுரம்தான் பி.ஜே.பி-க்கு கொடுத்துட்டமே”னு சொன்னார். அதற்கு வேலுமணி, “இவருக்காகதானே தாராபுரத்தை நிறுத்தி வெச்சோம்” என கூறினார். இதற்கு, “நான் மூப்பனாரால் வளர்க்கப்பட்டவன். நினைத்த இடத்தில் எல்லாம் எம்.எல்.ஏ-வுக்கு ஆசைப்பட்டு நிக்க மாட்டேன்” என்று கூறினேன். “சரி, முதல்வர், துணை முதல்வரிடம் பேசிவிட்டு சொல்கிறேன்” என வேலுமணி கூறினார்.
அதன்பிறகு வேலுமணி, “அண்ணா. நீங்க ஆட்டோ, சைக்கிள் சின்னத்தில் நின்னா ரீச் ஆகாது. இரட்டை இலை சின்னத்தில் நில்லுங்க” என்றார். அதற்கு நான், “நாங்கள் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட முடியும். அது மூப்பனார் வாங்கிக் கொடுத்த அதிர்ஷ்ட சின்னம்” என்று வற்புறுத்தினேன்.
இதன்மூலம், நான் இரட்டை இலை சின்னத்தில் நிக்க மாட்டேன் என வேலுமணி முடிவுக்கு வந்துவிட்டார். மேலும், நான் தி.மு.க-வுடன் ஆதரவாக இருப்பேன் என்று வேலுமணி தன் நண்பர்களிடம் கூறியிருக்கிறார். ``அவர் வால்பாறைல நின்னு பலமுறை ஜெயிச்சுருக்கார். சட்டசபைல நல்லா செயல்பட்ருக்கார். நீங்களே அவர் ஸ்டேட் லீடர்னு சொல்றீங்க.
அப்பறம் அவருக்கு சீட் இல்லாட்டி எப்படி வேலுமணி?” என அவரது கட்சியினரே கேட்டனர். அதற்கு வேலுமணி, “என்னுடைய மாவட்டத்தில் நான் கூட்டணிக்கு கொடுக்க மாட்டேன்” என்று திட்டவட்டமாக கூறினார்.
உடனே நான், “சிட்டிங் அ.தி.மு.க எம்.எல்.ஏ அம்மன் அர்ச்சுணன் இருக்கும்போதே, பா.ஜ.க-வுக்கு தெற்கு தொகுதி கொடுத்துள்ளீர்களே?” என்று கேட்டேன். “அது வேறு விஷயம்” என்று மழுப்பான பதிலையே வேலுமணி கூறினார். இதற்கு முன்பு நான் பல அமைச்சர்களுடன் பழகியுள்ளேன். ஆனால், என்னுடைய 55 ஆண்டுகால பொதுவாழ்வில் கர்வம், ஆணவம் நிறைந்த முதல் அமைச்சராக வேலுமணியை பார்க்கிறேன்.
இதுகுறித்து துணை முதல்வரிடம் பேசியபோது, “மேற்கு மண்டலம் முழுவதும் வேலுமணியின் கன்ட்ரோல். நீங்க திரு.வி.க நகர்ல நில்லுங்க அண்ணா” என்று கூறினார். பலவிஷயங்களை தியாகம் செய்துவிட்டு, அவரே கதி என்று இங்கு வந்தேன். என் தலைவர் வாசனும் என்னை கைவிட்டுவிட்டார். வால்பாறையில் சுயேட்சையாக போட்டியிடுவது குறித்து விரைவில் முடிவு எடுப்பேன்” என்றார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/2Q98zwh
via
