புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் என்.ஆர் காங்கிரஸ் – பா.ஜ.க கூட்டணி வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, மே மாதம் 7-ம் தேதி முதல்வராக பதவியேற்றார் ரங்கசாமி. துணை முதல்வர் உள்ளிட்ட அமைச்சர் பதவிகளுக்காக ரங்கசமியுடன் பா.ஜ.க பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருப்பதால், கடந்த 7-ம் தேதி ரங்கசாமி மட்டும் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். தொடர்ந்து கடந்த 9-ம் தேதி கொரோனா தொற்று ஏற்பட்டு சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் ரங்கசாமி. இந்நிலையில் அவசர அவசரமாக தங்கள் கட்சியைச் சேர்ந்த மூன்று பேரை நியமன எம்.எல்.ஏக்களாக நியமித்து அறிவிப்பை வெளியிட்டது மத்திய உள்துறை அமைச்சகம்.
தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் இன்னும் பதவியேற்காத நிலையில், தங்கள் கட்சியைச் சேர்ந்தவர்களை பா.ஜ.க எம்.எல்.ஏக்களாக நியமித்திருப்பது புதுச்சேரி அரசியலில் புயலைக் கிளப்பியிருக்கிறது. இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், ”புதுச்சேரியில் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்பதற்காக பா.ஜ.க சதி நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பதற்கு முன்பாகவே நியமன எம்.எல்.ஏக்களை நியமித்திருப்பது அப்பட்டமான ஜனநாயக படுகொலையாகும். இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். சட்டத்துக்கு விரோதமான முறையில் ஆட்சியைக் கைப்பற்ற முயலும் பா.ஜக.வின் சதியை முறியடிக்க தி.மு.க உள்ளிட்ட அனைத்து ஜனநாயக சக்திகளும் ஓரணியில் திரள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்து விலைக்கு வாங்கப்பட்டவர்களை தேர்தலில் நிறுத்தி ஆறு இடங்களில் பா.ஜ.க வெற்றி பெற்றிருக்கிறது. அதன் கூட்டணிக் கட்சியான என்.ஆர் காங்கிரஸ் 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தற்போது என்.ரங்கசாமி முதல்வராக பதவி ஏற்றிருக்கிறார். ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் யாரும் இன்னும் பதவி ஏற்கவில்லை. இதனிடையில் என்.ஆர் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி தானே ஆட்சி அமைக்கும் சதி முயற்சியில் பா.ஜ.க இறங்கியிருப்பது தெரிய வந்திருக்கிறது.
அதன் ஒரு அங்கமாக பா.ஜ.கவைச் சேர்ந்த மூவர் அவசரம் அவசரமாக நியமன உறுப்பினர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பா.ஜ.க எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை ஒன்பதாக உயர்த்தப்பட்டிருக்கிறது முதல்வர் பதவியை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்ற நோக்கத்தோடு கூட்டணிக் கட்சி என்று பாராமல் என்.ஆர் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கும் முயற்சியில் பா.ஜ.க இறங்கியிருக்கிறது. முதல்வராக பொறுப்பேற்றுள்ள ரங்கசாமி கொரோனா தொற்று காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கொல்லைப்புறமாக ஆட்சியை பிடிப்பதற்கு அனைத்து முயற்சிகளையும் பா.ஜ.க மேற்கொண்டு வருகிறது.
Also Read: பா.ஜ.க ஹைஜாக் அஸ்திரம்... புதுச்சேரியில் காலியாகிறதா காங்கிரஸ் ஆட்சி?
மக்களுடைய தீர்ப்புக்கு எதிராக அங்கு ஆட்சி அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ள பா.ஜ.கவின் சதித் திட்டத்தை முறியடிக்க, புதுச்சேரியில் உள்ள அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைய வேண்டும் என்று அறைகூவல் விடுக்கிறோம். புதுவையில் 6 இடங்களை கைப்பற்றி இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் உடனடியாக இதில் தலையிட வேண்டும். புதுச்சேரியில் பா.ஜ.க தலைமையிலான மதவாத ஆட்சி அமையாமல் தடுக்க தேவையான முன்னெடுப்புக்களை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இத்துடன் நட்புக்கு துரோகம் இழைக்கும் பா.ஜக.வை தோளில் சுமக்கும் என்.ஆர் காங்கிரஸ் இந்த நிலையிலாவது விழித்துக் கொள்ள வேண்டும் என்றும் தமக்கு எதிராக நேரவிருக்கும் வரலாற்றுப் பிழையை தவிர்த்துக்கொள்ள, தற்காத்துக்கொள்ள முன்னெச்சரிக்கையோடு செயல்பட வேண்டும் என்றும் சுட்டிக் காட்டுகிறோம்” என்று கூறியிருக்கிறார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/2SGfC0K
via
