250 குடும்பங்களுக்கு மளிகைப் பொருட்கள்; இலங்கைத் தமிழர்களை நெகிழ வைத்த இளைஞர்கள்!

0

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் ஜூன் 7-ம் தேதி வரையிலும் முழு ஊரடங்கு அமலிலிருந்த நிலையில், தற்போது ஜூன் 14-ம் தேதிவரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தொடர் ஊரடங்கால் கூலித் தொழிலாளர்கள் பலரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். குறிப்பாக, இலங்கை அகதிகள் முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் பலரும் சாப்பாட்டிற்கே சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், அழியா நிலை முகாமில் வசிக்கும் இலங்கைத் தமிழர்கள் கஷ்டப்படுவதை அறிந்த அறந்தாங்கியைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளைஞர்கள் முரளி, அருண், விக்னேஷ் உள்ளிட்ட சிலர் ஒன்றிணைந்து, தங்களால் முடிந்த தொகையை ஒதுக்கி அங்குள்ள 250 குடும்பங்களுக்குத் தேவையான மளிகைப் பொருட்களைக் வாங்கிக் கொடுத்து இலங்கைத் தமிழ் உறவுகளை நெகிழ வைத்திருக்கின்றனர்.

மளிகைப் பொருட்கள்

இதுபற்றி, பொறியியல் பட்டதாரி இளைஞர் அருணிடம் பேசினோம்.

``நாங்க எல்லாரும் நண்பர்கள். சிவில் இன்ஜினீயரிங் முடிச்சிட்டு நாலு வருஷமா சென்னையில வேலை பார்த்துக்கிட்டு இருந்தோம். கொரோனா பிரச்னை ஆரம்பிச்சதுல இருந்து தொடர்ச்சியா எங்களுக்கு வேலை கிடைக்காத நிலை. ரொம்ப நாள் சும்மாதான் இருந்தோம். வீட்டுல சப்போர்ட் பண்ணாங்க. இப்போ எல்லாரும் ஒண்ணு சேர்ந்து உள்ளூர்லயே சொந்தமா ரெண்டு, மூணு புராஜெக்ட் எடுத்துப் பார்த்துக்கிட்டு இருக்கோம். அழியா நிலை முகாம்ல இருக்கவங்க பலரும் பெயின்டர் வேலை பார்ப்பாங்க.

குறிப்பா அவங்கள்ல பலர் எங்ககிட்டதான் வேலை கேட்டு வருவாங்க. வேலை ஆர்டர்கள் வரும்போது நாங்க அவங்களுக்கு முன்னுரிமை கொடுத்திடுவோம். இப்போ ஊரடங்கால அவங்களுக்கு தொடர்ச்சியா வேலை கொடுக்க முடியாத சூழல். 'வேலையில்லாம எங்க பிள்ளை குட்டி எல்லாம் பட்டினியா கிடக்குது'னு சொல்லி ரொம்பவே சங்கடப்பட்டாங்க. அப்பதான் அவங்களுக்கு நம்மால முடிஞ்ச சின்ன உதவியையாச்சும் செய்யலாம்னு முடிவு பண்ணோம். எங்களால முடிஞ்ச தொகை ஒதுக்குனோம். எங்ககிட்டயிருந்து குறைவான தொகைதான் கலெக்ட் ஆனுச்சு. அதை வச்சு 250 குடும்பங்களுக்கும் உதவி பண்ண முடியாது.

மளிகைப் பொருட்கள்

உடனே வெளிநாட்டுல இருக்குற என் அண்ணன்கிட்ட இது பத்தி சொன்னேன். அவரும் கேள்வியே கேக்காம பணம் அனுப்பி வெச்சாரு. அவரோட சேர்ந்து அவர் நண்பர்களும் அனுப்புனாங்க. எல்லாத்தையும் சேர்த்து மொத்தமா ரூ.55,000 வரையிலும் கலெக்ட் ஆனுச்சு. அத வச்சி எண்ணெய், கோதுமை மாவு, கொண்டக்கடலை, பாசிப்பருப்பு, பிஸ்கட்னு 11 பொருட்கள் கொண்ட தொகுப்பை ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொடுத்தோம்.

சின்ன உதவிதான் இது, எத்தனை நாட்கள் அவங்களுக்கு வரும்னு தெரியலை. ஆனாலும் நாங்க கொடுத்ததும் அவங்க மொகத்துல ரொம்பவே சந்தோஷம். நம்ம தொப்புள் கொடி உறவுகளுக்கு உதவியதுல எங்களுக்கும் ரொம்பவே சந்தோஷமா இருந்துச்சு. தொடர்ந்து அவங்களுக்கு உதவணும். எங்கள மாதிரி பலரும் அவங்களுக்கு இந்த நேரத்துல கைக்கொடுத்தா உதவியா இருக்கும்" என்றார்.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3zesE6f
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*