செவிலியரின் கவனக்குறைவால் துண்டான குழந்தையின் கைவிரல்; அரசு மருத்துவமனையில் நடந்தது என்ன?

0

தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் பிறந்து 14 நாள்களே ஆன பச்சிளம் பெண் குழந்தைக்கு குளுக்கோஸ் ஏற்றுவதற்காகப் போடப்பட்ட பிளாஸ்திரி பேண்டை கத்தரிக்கோலால் அகற்றும்போது, பணியிலிருந்த செவிலியர் அலட்சியமாகச் செயல்பட்டதால் குழந்தையின் கட்டைவிரல் துண்டானது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சம்பந்தப்பட்ட செவிலியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழந்தையின் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.

அரசு மருத்துவமனை

தஞ்சாவூர் அருகே உள்ள காட்டூர் பகுதியைச் சேர்ந்த கணேசன் (34), விவசாயக் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கும், பிரியதர்ஷினி (20) என்ற பெண்ணுக்கும் ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கர்ப்பமாக இருந்த பிரியதர்ஷினி பிரசவத்திற்காக தஞ்சாவூர் அரசு இராசா மிராசுதார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.

கடந்த 25-ம் தேதி பிரியதர்ஷினிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. குறை மாதத்திலேயே பிறந்து விட்டதால் குழந்தைக்கு வயிற்றில் கோளாறு இருப்பதாகக் கூறிய டாக்டர்கள், தாய்ப்பால் கொடுக்க வேண்டாம் என அறிவுறுத்தியிருந்தனர். சத்துக்காகக் குழந்தைக்கு கையில் வென்ஃப்ளான் (venflon) வைத்து, அதில் ஊசி மூலம் குளுக்கோஸ் ஏற்றப்பட்டு வந்தது. இதையடுத்து குழந்தையின் உடல்நிலை தேறியதால், தாயையும் சேயையும் டிஸ்சார்ஜ் செய்ய மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்தது.

அரசு மருத்துவமனை

இதையடுத்து குழந்தையின் கையிலிருந்த வென்ஃப்ளான் மற்றும் பிளாஸ்திரியை அகற்றுவதற்காக செவிலியர் கத்திரக்கோலால் வெட்டியுள்ளார்.அப்போது அவர் கவனக்குறைவாகச் செயல்பட்டதால் குழந்தையின் கை கட்டைவிரல் துண்டானது. இதைப் பார்த்த குழந்தையின் பெற்றோர் கணேசனும் பிரியதர்ஷினியும் பதறித் துடித்தனர். பின்னர் துண்டான கட்டைவிரலை சேர்த்து வைத்து தையலிட்டுக் கட்டுப்போட்டுள்ளனர். இந்த சம்பவம் அரசு மருத்துவமனையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து கணேசனிடம் பேசினோம்.

``குழந்தை தேறிடுச்சுனு சொல்லி, வீட்டுக்கு அனுப்புறதுக்காக கையிலிருந்த பிளாஸ்திரி மற்றும் ஊசியை செவிலியர் அகற்றினாங்க. அப்போ குழந்தையைப் பார்க்காம வேற எங்கேயோ பார்த்தபடி கத்தரிக்கோலால வெட்டினாங்க. அதுல குழந்தையோட கை கட்டைவிரல் துண்டாகிடுச்சு. நாங்க துடிதுடிச்சுப் போயிட்டோம். இது முற்றிலும் அலட்சியத்தால நடந்த தவறு. இப்போ துண்டான விரலை இணைச்சு தையல் போட்டிருக்காங்க. ஆனா மருத்துவர்கள் இதுவரை வேற எந்த விளக்கமும் எங்ககிட்ட கொடுக்கல. எங்க புள்ளைக்கு நடந்தது வேற யாருக்கும் நடக்காதபடி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கணும்'' என்றார் கண்ணீரும் கோபமுமாக.

கட்டை விரல் துண்டானதாகச் சொல்லப்படும் குழந்தை

செவிலியர்கள் தரப்பினரோ, `பச்சிளம் குழந்தையின் கையில் போடப்பட்டுள்ள பிளாஸ்திரியை கத்தரிக்கோல் பயன்படுத்திதான் நீக்குவார்கள். ஆனால் இந்தத் தவறு துரதிர்ஷ்டவசமாக நடந்துவிட்டது. இதற்குக் காரணமான செவிலியர் கடும் மன உளைச்சலில் இருக்கிறார்' என்று தெரிவித்தனர்.

தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் ரவிக்குமார், ``குழந்தையின் விரல் துண்டாகவில்லை, சதைப்பகுதி வெட்டப்பட்டுள்ளது. அதனை விரலுடன் இணைத்து தைத்து கட்டுப் போடப்பட்டுள்ளது. விரலுக்கு ரத்தம் ஓட்டம் செல்வதை வைத்தே அப்பகுதி சேருமா என்பது இரண்டு நாள்களில் தெரிய வரும்'' என்றார்.

மருத்துவ அலட்சியத்துக்கு முடிவு எப்போது?



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3x7iaE4
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*