நடந்து முடிந்த கேரள மாநில சட்டசபை தேர்தலில் மஞ்சேஸ்வரம் மற்றும் கோணி ஆகிய இரண்டு தொகுதியில் போட்டியிட்டார் மாநில பா.ஜ.க தலைவர் கே.சுரேந்திரன். அவர் ஒரு தொகுதியிலும் வெற்றிபெறவில்லை. கே.சுரேந்திரன் 2016 சட்டசபை தேர்தலில் மஞ்சேஸ்வரம் தொகுதியில் போட்டியிட்டு 89 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார். அவரது பெயரை போன்று வரும் பி.எஸ்.பி வேட்பாளர் கே.சுந்தர 467 வாக்குகள் பெற்றிருந்தார். ஒருவேளை கே.சுந்தர போட்டியிடாமல் இருந்தால் கே.சுரேந்திரன் வெற்றிபெற்றிருப்பார் என பா.ஜ.க-வினர் கருதினர். இந்த நிலையில் கடந்த தேர்தலில் மஞ்சேஸ்வரம் தொகுதியில் மீண்டும் கே.சுந்தர வேட்புமனு தாக்கல் செய்தார். பின்னர் அவர் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றதுடன் திடீரென பா.ஜ.க-வில் இணைந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த கே.சுந்தர, "நான் போட்டியிடாமல் வேட்புமனுவை வாபஸ் பெற்றால் 15 லட்சம் ரூபாயும், ஒரு ஸ்மார்ட் போனும் தருவதாக பா.ஜ.க-வினர் கூறினர். முதற்கட்டமாக இரண்டரை லட்சம் ரூபாயும் ஸ்மார்ட் போனும் தந்தனர். மீதி பணத்தை கேட்டதற்கு வெற்றிபெற்றபிறகு பார்க்கலாம் என்றனர். அதன் பிறகு என்னை ஏமாற்றிவிட்டனர்" என்றார். இதுகுறித்து கே.சுந்தர காவல் நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு புகார் அளித்துள்ளார். அதன்பேரில் கேரள மாநில பா.ஜ.க தலைவர் கே.சுரேந்திரன் மீது ஆள் கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது பா.ஜ.க-வினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த கேரள மாநில பா.ஜ.க பொதுச்செயலாளர் எம்.டி.ரமேஷ் கூறுகையில், "பி.எஸ்.பி இந்தியாவின் முக்கிய தேசிய கட்சிகளில் ஒன்று. கே.சுந்தர கடந்த முறை தேர்தலில் போட்டியிட்டார். இந்த முறை சொந்த விருப்பத்தின் அடிபடையில் தனது வேட்புமனுவை வாபஸ் வாங்குவதாக எழுதிக்கொடுத்து போட்டியில் இருந்து வெளியேறியுள்ளார். அதை வற்புறுத்தி வாபஸ் பெற வைத்தததாக எப்படி போலீஸ் வழக்கு எடுக்கும்.
தேர்தல் முடிந்து பல வாரங்கள் கடந்த பிறகு அவர் குற்றச்சாட்டை சொல்கிறார். அவரை யாராவது அப்படி சொல்லும்படி கூறியிருக்கலாம். அவரைக் கடத்திக்கொண்டு போனதாக போலீஸார் கேஸ் எடுத்திருக்கிறார்கள். இது சட்ட ரீதியாக செய்ய வேண்டிய விஷயம். பணம் தந்தார்கள் என கூறும் அதே பேட்டியில், என்னை கே.சுரேந்திரன் நேரில் பார்க்கவில்லை என்கிறார். காணாத ஒருவர் மீது எப்படி வழக்கு போடுவீர்கள். எனவே வேண்டுமென்றே பா.ஜ.க மாநில தலைவர் மீது ஜாமீன் இல்லாத பிரிவில் வழக்குப்பதிவு செய்து வேண்டும் என்றே அவரை வேட்டையாடும் முயற்சி நடக்கிறது.
பா.ஜ.க மாநில தலைவர் மீது பொய் வழக்குப்போட்டு அவரை கைது செய்து கட்சியை பலவீனப்படுத்தும் நோக்கில் செயல்படக்கூடாது என முதல்வருக்கும் இந்த அரசுக்கும் கூறிக்கொள்கிறேன். பி.ஜே.பி-யோடும், கே.சுரேந்திரனோடும் உங்களுக்கு கட்சி ரீதியாக விரோதம் இருக்கலாம். அதை அரசியல் ரீதியாக எதிர்கொள்ளவேண்டும். மாறாக அவர் மீது பொய் வழக்கு போட்டு, அவரை சிறையில் அடைத்து பழி தீர்க்கலாம் என நீங்கள் நினைக்க வேண்டாம். இது இந்தியா என்பதை முதல்வர் நினைக்க வேண்டும். இது கம்யூனிஸ்ட் நாடு அல்ல. இது ஜனநாயக நாடு.
இங்கு நீங்கள் உங்கள் விருப்பம்போல பொய் வழக்கு போட்டால் சட்ட ரீதியகவும், அரசியல் ரீதியாகவும் உள்துறை அமைச்சரும் போலீஸ் அதிகாரிகளும் அதற்கானவிலை கொடுக்க வேண்டிய நிலை வரும். மாநில தலைவர் மீது வழக்கு போட்டதை கண்டித்து நாளை பத்தாயிரத்துக்கு அதிகமான இடங்களில் போராட்டம் நடத்த உள்ளோம். கொரோனா விதிகளை பின்பற்றி போராட்டம் நடக்கும்" என்றார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3weacsQ
via
