கடலூர் மாவட்டம், பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தின் ஆய்வாளர் ராதிகா அந்த இளம்பெண் கூறிய புகாரை கேட்டு ஆடித்தான் போனார். ’மது போதைக்கு அடிமையான தனது கணவர், நண்பர்களிடம் குடிப்பதற்கு வாங்கிய பணத்துக்காக அவர்களை வைத்து பலமுறை தன்னை பாலியல் வன்கொடுமை செய்தார்’ என்று அந்த பெண் காவல் நிலையத்தில் அழுதுகொண்டே கூறியிருக்கிறார். புகாரைப் பெற்ற அடுத்த நிமிடமே களத்தில் இறங்கிய ஆய்வாளர் ராதிகா, அந்த பெண்ணின் கணவரையும், அவரது இரண்டு நண்பர்களையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்து சிறைக்கு அனுப்பியிருக்கிறார்.
சம்பவத்தின் முழு பின்னணியை தெரிந்துகொள்ள விசாரணை அதிகாரிகளிடம் பேசினோம். கடலூர் மாவட்டம், பண்ருட்டியை ஒட்டியிருக்கும் எல்.ஆர்.பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது). பூக்கடையில் வேலை செய்யும் இவருக்கும், 21 வயதாகும் மல்லிகாவுக்கும் (பெயர் மாற்றப்பட்டிருக்கிறது) கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் நடைப்பெற்றது. இந்த தம்பதியினருக்கு இரண்டு வயதில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. மது போதைக்கு அடிமையான சரவணன் தினமும் குடித்துவிட்டு வந்து மல்லிகாவை அடித்து துன்புறுத்துவதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார். அதனால் இருவருக்குமான வாக்குவாதம் அன்றாட நிகழ்வாகியிருக்கிறது.
இதனிடையே வேலைக்கு செல்வதை நிறுத்திய சரவணன், வி.ஆண்டிக்குப்பத்தைச் சேர்ந்த தனது நண்பர்களான சுந்தரமூர்த்தி மற்றும் மணிகண்டனிடம் அடிக்கடி பணம் வாங்கி குடித்திருக்கிறார். ஒருகட்டத்தில் பணம் தர மறுத்த சுந்தரமூர்த்தி,. கொடுத்த கடனை திருப்பி கேட்டிருக்கிறார். அதற்கு தன்னிடம் பணமில்லை என்று கூறிய சரவணன், ’என் மனைவி ரொம்ப அழகாக இருப்பா’ என்று ஆசை வார்த்தை கூறியிருக்கிறார். சரவணன் குடித்துவிட்டு உளறுகிறார் என்று நினைத்த சுந்தரமூர்த்தி, மறுநாள் அதுகுறித்து கேட்டிருக்கிறார். அதற்கு, ’என் வீட்டுக்கு, நான் சொல்லும்போது வா’ என்று சரவணன் கூற, அன்று அவருக்கு மது வாங்கிக் கொடுத்திருக்கிறார் சுந்தரமூர்த்தி.
2019-ம் ஆண்டு ஒருநாள் விட்டமின் மாத்திரைகள் என்று மல்லிகாவுக்கு தூக்க மாத்திரைகளை கொடுத்திருக்கிறார் சரவணன். மல்லிகா மயக்கமடைந்தபிறகு சுந்தரமூர்த்தியை தனது வீட்டுக்கு வரவழைத்த சரவணன், தனது மனைவி படுத்திருந்த அறைக்குள் அனுப்பியிருக்கிறார். அதன்பிறகு தனக்கு கொடுக்க வேண்டிய கடனில் பாதி கொடுத்தால் போதும் என்று கூறிய சுந்தரமூர்த்தி, அன்றும் சரவணனுக்கு இலவசமாக மது வாங்கிக் கொடுத்ததுடன் பணமும் கொடுத்திருக்கிறார்.
தூக்கத்தில் இருந்து எழுந்ததும் தனக்கு நேர்ந்ததை உணர்ந்த மல்லிகா, சரவணனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். அப்போது, ’எனக்கு வருமானமில்லை. கடனை திருப்பிக் கேட்டு தொந்தரவு செய்ததால்தான் அப்படி செய்தேன். இல்லைன்னா தற்கொலை செய்துகொள்வேன். இது பெரிய விஷயமில்லை’ என்று கூறி சமாதானப்படுத்தியிருக்கிறார் சரவணன்.
அதையடுத்து 2020-ம் ஆண்டு டிசம்பரில் கொடுத்த பணத்தை கேட்ட தனது மற்றொரு நண்பரான மணிகண்டனிடமும், அதே ஆசை வார்த்தைகளை கூறியிருக்கிறார். அதனடிப்படையில் மது வாங்கிக் கொடுத்த மணிகண்டனை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்ற சரவணன், மல்லிகாவை தனது நண்பருடன் இருக்கும்படி வற்புறுத்தியிருக்கிறார். அதற்கு மறுப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட மல்லிகாவிடம் ’கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்க. உன் வீட்டுக்காரருக்காக இதை செய்ய மாட்டியா ?
நீ சம்மதிக்கலைன்னா நான் தற்கொலை செய்துகொள்வேன்’ என்று மிரட்டியிருக்கிறார் சரவணன். அதற்கும் மல்லிகா சம்மதிக்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், மணிகண்டன் மூலம் கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்ய வைத்திருக்கிறார். அதன்பிறகு ’இதோடு எல்லாம் முடிஞ்சிடுச்சி’ என்று கூறி அழுதுகொண்டிருந்த மல்லிகாவை சமாதானப்படுத்திய சரவணனுக்கு அன்று இலவசமாக மது வாங்கிக் கொடுத்திருக்கிறார் மணிகண்டன்.
அதையடுத்து கடந்த ஜனவரி மாதம் தனக்கு மது வாங்கிக் கொடுக்கும்படி மணிகண்டனிடம் கேட்டிருக்கிறார் சரவணன். அதற்கு அவர் மறுக்கவே, மது வாங்கிக் கொடுத்தால் அதற்கு பிரதியுபகாரமாக மீண்டும் தனது மனைவியுடன் இருக்கலாம் என்று சரவணன் கூற, மதுவை வாங்கிக் கொடுத்திருக்கிறார் மணிகண்டன்.
Also Read: `என் குழந்தைகள்கிட்ட சொல்வேன்; கலங்கிய கணவர்!'- கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் மூவருக்கு தூக்கு
அதையடுத்து மணிகண்டனை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்ற சரவணன், மல்லிகாவை அவருடன் இருக்கும்படி வற்புறுத்தியிருக்கிறார். அதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த மல்லிகா சரவணனை கடுமையாக தாக்கிவிட்டு தனது அம்மா வீட்டிற்கு சென்றுவிட்டார். ஆனால் அதன்பிறகும் அங்கு சென்று சரவணன் தொடர்ச்சியாக தொல்லை கொடுக்கவே, அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்திருக்கிறார் மல்லிகா. வழக்குப் பதிவு செய்து மூவரையும் சிறையில் அடைத்திருக்கும் காவல்துறை, விசாரணை மேற்கொண்டு வருகிறது.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3vY8k7f
via
