தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவரும், இவரின் மகன் பென்னிக்ஸும் செல்போன் கடை நடத்தி வந்தனர். கடந்த ஆண்டு, ஜூன் 19-ம் தேதி ஊரடங்கில், குறித்த நேரத்திற்குள் கடையை அடைப்பது தொடர்பாக போலீஸாருக்கும் ஜெயராஜூவுக்கும் ஏற்பட்ட சிறு வாக்குவதாத்தால் விசாரணைக்காக போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்லப்பட்டார் ஜெயராஜ். தந்தையைத் தேடி ஸ்டேஷனுக்குச் சென்ற பென்னிக்ஸ், போலீஸார் தன் தந்தையை தாக்கிக் கொண்டிருந்ததைப் பார்த்து தடுக்க முயன்றுள்ளார்.
இதனால், ஆத்தரமடைந்த போலீஸார் தந்தை, மகன் இருவரையும் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து இரவு முழுவதும் கடுமையாகத் தாக்கவே, இருவரும் பலத்த காயம் அடைந்தனர். தொடர்ந்து, சாத்தான்குளம் நீதிமன்ற நீதிபதி சரவணன் முன்னிலையில் ஆஜர்படுத்தியபின், இருவரும் கோவில்பட்டி கிளைச்சிறையில் அடைக்கபட்டனர். ஜூன் 22-ம் தேதி இரவில் பென்னிக்ஸும், 23-ம் தேதி அதிகாலையில் ஜெயராஜூம் சிறையிலேயே அடுத்தடுத்து உயிரிழந்தனர். இச்சம்பவம் நாட்டையே உலுக்கியது.
இதையடுத்து ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை உள்ளிட்ட 10 போலீஸார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அத்துடன், அக்காவல் நிலையத்தில் பணிபுரிந்த அனைத்து காவலர்களும் கூண்டோடு வேறு காவல் நிலையங்களுக்கு மாற்றப்பட்டனர். இந்த வழக்கில், சாத்தான்குளம் காவல்நிலையத்தில் சம்பவத்தன்று இரவு என்ன நடந்தது என்பது குறித்த தலைமைக்காவலர் ரேவதியின் துணிச்சலான வாக்குமூலம்தான் குற்றவாளிகளை தப்பவிடாமல் சிக்க வைத்தது. இதனிடையே இவ்வழக்கினை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றியது தமிழக அரசு. ஐ.ஜி சங்கர் தலைமையிலான போலீஸார் 10 போலீஸாரையும் கைது செய்யது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை சிறையில் அடைத்தனர்.
வழக்கின் தீவிரத்தை உணர்ந்த நீதிமன்றம், இவ்வழக்கினை சி.பி.ஐ. வசம் ஒப்படைத்தது. டெல்லியில் இருந்து வந்த சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணையை தீவிரப்படுத்தினர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு குற்றப்பத்திரிக்கையை நீதிமன்றத்தில் சி.பி.ஐ., அதிகாரிகள் சமர்ப்பித்தனர். அதில், “தந்தை, மகன் உயிரிழந்ததற்கு சாத்தான்குளம் காவல் நிலையத்தின் போலீஸரே காரணம். சி.பி.சி.ஐ.டி., போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 10 பேரும் குற்றவாளிகள்” எனக் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், எஸ்.எஸ்.ஐ., பால்துரை உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இவ்வழக்கை விசாரணை செய்து வந்த சி.பி.ஐ., அதிகாரிகளில் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாலும், ஊரடங்கினாலும் இவ்வழக்கு விசாரணை மந்தமானது. இந்த வழக்கு மதுரை முதலாவது அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. பென்னிக்ஸின் சகோதரி பியூலா, கோவில்பட்டி கிளைச்சிறையின் கண்காணிப்பாளராக இருந்த சங்கர் உள்ளிட்ட சில சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இவ்வழக்கின் விசாரணை நீதிபதி பத்மநாபன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதில், கைது செய்யப்பட்ட 9 போலீஸாரும் ஆஜராகினர்.
கொலை செய்யப்பட்ட ஜெயராஜின் மனைவி செல்வராணியும் ஆஜராகி சுமார் 3 மணி நேரம் சாட்சியம் அளித்தார். கண்ணீர் மல்கப் பேசிய அவர், “என்னோர கணவரும் மகன் பென்னிக்ஸும் நல்ல உடல் ஆரோக்கியத்தோடதான் இருந்தாங்க. போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டுப் போறதுக்கு முன்னால அவங்களைப் பார்த்தேன். அதுக்குப் பிறகு ரெண்டு பேரையும் சடலமாத்தான் பார்த்தேன். என்னோட கணவருக்கோ, மகனுக்கோ சாத்தான்குளம் போலீஸாருக்கும் எந்த முன்விரோதமும் கிடையாது. ரெண்டு பேரையும் போலீஸ்காரங்க ஸ்டேஷனுக்கு கூட்டிட்டுப் போனதை உள்ளூர்ல உள்ள சில உறவினர்கள் மூலமாத்தான் தெரிஞ்சுக்கிட்டேன்.
Also Read: சாத்தான்குளம்: `நீதி கிடைக்கும்கிற நம்பிக்கையில இருக்கோம்!’ - சோகத்திலிருந்து மீளாத குடும்பத்தினர்
அன்றிரவு என் மகன் வேறொருவரின் போனில் இருந்துதான் எங்கிட்டப் பேசினான். ‘அம்மா.., போலீஸ்காரங்க அப்பாவையும் என்னையும் ரொம்ப அடிக்கிறாங்க. எங்களால அடி தாங்க முடியலன்னு சொல்லி அழுதான். அதுக்குப் பிறகு, அவனாலத் தொடர்ந்து பேச முடியல. ’நடந்தது நட்துவிட்டது.. நீ வெள்ளாளன்விளையில உள்ள உன்னோட தம்பி வீட்டுக்குப் போயிடுன்னு சொன்னார். அவராலயும் தொடர்ந்து பேச முடியலை” எனச் சொல்லி கதறி அழுதுள்ளார். இதையடுத்து வழக்கின் விசாரணையை வரும் வரும் 11-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார் நீதிபதி. விசாரணையை முடித்து வெளியே வந்த செல்வராணி, “நடந்த உண்மையைச் சொல்லியிருக்கேன். நீதி கிடைக்கும்னு நம்புறேன்” என்று மட்டும் சொன்னார். ஜெயராஜின் மூத்த மகளான பெர்சிஸ்ஸிடம் பேசினோம்,
“இந்த வழக்கைப் பொறுத்த வரையில், குற்றம் இழைத்தவர்கள் மேல்நிலை காவல் அதிகாரிகள். ஆனால், சாட்சிகள் கீழ்நிலை காவலர்கள் என்பதால், அதிகார பலம், அழுத்தத்தால் சாட்சியங்களை கலைக்க வாய்ப்புள்ளது என்பதால், இவ்வழக்கை விரைவாக விசாரணை செய்தால் எங்களுக்கு உரிய நீதி கிடைக்கும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தோம். அதற்குப் பிறகு, ‘இவ்வழக்கு விசாரணயை 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும்’ என உத்தரவிடப்பட்டது. ஆனா, கொரோனா ஊரடங்கால தள்ளிப்போன விசாரணை தற்போதுதான் வேகம் எடுத்துள்ளது. ஒரே குடும்பத்துல ரெண்டு உயிர்களை இழந்திருக்கோம். நீதிமன்றத்தை மட்டும்தான் முழுமையா நம்புறோம். எங்களுக்கான நீதி நிச்சயம் கிடைக்கும்ங்கிற நம்பிக்கையில இருக்கோம்” என்றார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3fxzKe1
via
