ஆற்காடு: வருமான வரித்துறை அதிகாரிகளைப் போல நடித்து கைவரிசை! 6 பேர் சிக்கியது எப்படி?

0

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டிலுள்ள வேலூர் மெயின் ரோடு ஒன்றாவது தெருவைச் சேர்ந்தவர் செல்வகுமார் என்கிற ஆட்டோ கண்ணன். வயது 52. ஆற்காட்டில் நிதி நிறுவனம் நடத்திவரும் இவர், தனியார் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றின் செயலாளராகவும் உள்ளார். கடந்த மாதம் 30-ஆம் தேதி மதியம் செல்வகுமார் வீட்டுக்கு ஒரு பெண் உட்பட 6 பேர் சொகுசு காரில் வந்தனர். அவர்கள் தங்களை சி.பி.ஐ மற்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் என அறிமுகம் செய்துகொண்டு வீட்டை சோதனை செய்துள்ளனர். அப்போது, வீட்டிலிருந்த ரூ.6 லட்சத்தை அவர்கள் எடுத்துச் சென்றுள்ளனர். பின்னர், இதுகுறித்து விசாரணை செய்ததில், சொகுசு காரில்வந்து பணத்தை எடுத்துச்சென்றது வருமான வரித்துறை அதிகாரிகள் இல்லை எனத் தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட நபர்கள்

Also Read: வருமான வரித்துறை வலையில் வேலுமணி... “சபேசன் எங்கே?”

இதுகுறித்து, ராணிப்பேட்டை எஸ்.பி அலுவலகத்தில், நிதி நிறுவன அதிபர் செல்வகுமார் புகாரளித்தார். அதன்பேரில், ஆற்காடு டவுன் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில், ஆற்காடு டவுன் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணையும் தீவிரப்படுத்தப்பட்டது. சம்பவ பகுதியிலுள்ள சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, போலி ரெய்டு நடப்பதற்கு முன்பு செல்வகுமார் வீட்டை ஒரு பைக்கில் வந்த இரண்டு நபர்கள் நோட்டமிட்டு சென்றது தெரியவந்தது. கண்ணமங்கலம் கூட்ரோட்டில் பிரியாணி கடை நடத்திவரும் ஆற்காடு விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த எழிலரசு (40), ஆற்காடு ஜீவானந்தம் சாலையில் ஹோட்டல் நடத்திவரும் பாரத் (44) ஆகிய இருவரும்தான் நோட்டமிட்ட நபர்கள் என அடையாளம் காணப்பட்டது.

விசாரணையில், பிரியாணி கடை நடத்திவரும் எழிலரசு, கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு செல்வகுமாருக்குச் சொந்தமான இடத்தில் கார் டெக்கர்ஸ் கடை நடத்தி வந்துள்ளார். அப்போதிலிருந்தே, செல்வகுமார் எழிலரசுக்குப் பணம் கொடுத்து உதவியிருக்கிறார். இதனால், செல்வகுமார் குறித்த அனைத்து விவரங்களையும் எழிலரசு தெரிந்து வைத்துள்ளார். இதையடுத்து, எழிலரசு, அவரது நண்பர் பாரத் ஆகிய இருவரும் சேர்ந்து வருமான வரித்துறை அதிகாரிகளைப்போல் நடித்து செல்வகுமார் வீட்டில் கொள்ளையடிக்கத் திட்டமிட்டுள்ளனர். இதற்காக சென்னை எழும்பூரைச் சேர்ந்த மது, பெரம்பூரைச் சேர்ந்த யாதவா என்கிற ராமகிருஷ்ணன், சையத், முபினா, நரேன், ராஜேஷ் ஆகிய 6 பேர் கொண்ட கும்பலை, வருமான வரித்துறை அதிகாரிகளைப்போல் நடிக்கவைத்து செல்வகுமாரின் வீட்டில் கைவரிசை காட்டியிருப்பதும், தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட நபர்கள்

இந்த கும்பல் பயன்படுத்திய சொகுசு காரின் பதிவு எண்ணும் போலி எனத் தெரியவந்தது. இந்தச் சம்பவத்தில், ஈடுபட்ட ஆற்காடு எழிலரசு, பாரத் மற்றும் மது, ராமகிருஷ்ணன், சையத், முபினா ஆகிய 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து ரூ.4 லட்சம் பணம், ஒரு கார், இரண்டு பைக்குகளையும் பறிமுதல் செய்துள்ளனர். சம்பவத்தில் தொடர்புடைய நரேன், ராஜேஷ் ஆகிய மேலும் இருவரையும் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த கும்பல் வேறு எங்கேனும், இதேபோல் நூதன முறையில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்களா என்ற கோணத்திலும் கிடுக்கிப்பிடியான விசாரணை நடைபெற்றுவருகிறது.



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3fQXA4F
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*