கூடங்குளம் கிராமத்தில் இருந்து 8 கி.மீ தொலைவில் இருக்கிறது இருக்கன்துறை ஊராட்சி. இந்தப் பகுதியில் பத்துக்கு அதிகமான கல்குவாரிகள் அரசு அனுமதியுடன் இயங்கி வருகின்றன. கல்குவாரி உரிமையாளர்கள், விதிகளை மீறி சக்தி வாய்ந்த வெடிகளைப் பயன்படுத்துவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
வெடிகளின் காரணமாக வீடுகளில் விரிசல் ஏற்படுவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். அணு உலை வளாகம் அருகில் இருக்கும் நிலையில், சுரங்கங்களின் வெடிகளால் அணு உலையின் உறுதித் தன்மை பாதிக்கும் என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டு.
சுற்றிலும் விவசாய நிலங்கள் உள்ள நிலையில், இருக்கன்துறை பகுதியில் ஆங்காங்கே கல்குவாரிகள் செயல்பட அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது. அவற்றில் ஆழமாகத் தோண்டப்படுவதால் அருகில் இருக்கும் விவசாய நிலங்களின் நீர் மட்டம் கீழே செல்வதால் வறட்சியால் விவசாயம் செய்ய முடியாத நிலை உருவாகி வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கிறார்கள்.
அத்துடன், குவாரிகளில் எடுக்கப்படும் கனிமங்களை அதிக பாரத்துடன் லாரிகளில் ஏற்றிச் செல்லப்படுவதால் கிராமப் பகுதிகளில் உள்ள சாலைகள் சீரழிந்து குண்டும் குழியுமாகக் கிடக்கின்றன. லாரிகளில் கொண்டு செல்லப்படும் கற்கள் சாலைகளில் சிதறுவதால் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்துகளில் சிக்குகிறார்கள்.
கல்குவாரி அனுமதியை ரத்து செய்யக் கோரி அதிகாரிகளிடம் முறையீடு செய்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ராதாபுரம் குழு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் மாயகிருஷ்ணன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், கல்குவாரிகளின் அனுமதியை ரத்து செய்யக் கோரி கோஷங்களை எழுப்பினர்.
தங்களின் வாழ்வாதாரமான விவசாயம் பாதிக்கப்படுவதுடன், வீடுகள் இடிந்து விழும் நிலை ஏற்பட்டிருப்பதாக அவர்கள் புகார் தெரிவித்தனர். அத்துடன், அணு உலை கட்டுமானப் பணிகளும் பாதிக்கப்பட்டு பெரும் ஆபத்து ஏற்படும் சூழல் ஏற்பட்டிருப்பதால் அதிகாரிகள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தினார்கள்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3itmlWo
via
