'சார்பட்டா' படத்தின் இயக்குநர் பா.இரஞ்சித், நடிகர்கள் ஆர்யா, பசுபதி, 'டான்ஸிங் ரோஸ்' ஷபீர், துஷாரா, அனுபமா, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், திரைக்கதை - வசனம் எழுதிய எழுத்தாளர் தமிழ்ப்பிரபா, நடன இயக்குநர் சாண்டி உள்பட பலரும் கமல்ஹாசன் சந்திப்பில் மகிழ்வும், நெகிழ்வுமாக கலந்துகொண்டிருக்கின்றனர்.
'' 'சார்பட்டா'வில் வரும் அந்த உலகத்தை நான் நேரடியாகப் பார்த்திருக்கிறேன். என் நண்பர்கள் பலரும் பாக்ஸர்களாக இருந்திருக்கிறார்கள். படம் பார்க்கும்போது அந்த காலகட்டத்தை நேரடியாக பார்த்ததைப்போல் இருந்தது. பா.இரஞ்சித் தனது கருத்துகளை எளிதாக மக்களிடம் கொண்டுபோய்சேர்க்க ஒரு திரைமொழியை கையாண்டிருக்கிறார். அது ரசிக்கும்விதமாகவும், பாராட்டும்விதமாகவும் இருக்கிறது'' என படக்குழுவினரை சிலாகித்துப் பேசியிருக்கிறார் கமல்ஹாசன். இந்த சந்திப்பு தொடர்பாக நடிகர் பசுபதியிடம் பேசினேன்.
''கமல் சார் படம் பார்த்துட்டு, எங்க குழுவை கூப்பிட்டு பாராட்டினது ரொம்ப சந்தோஷமா இருந்தது. இயக்குநர்ல இருந்து நடிகர்கள், டெக்னீஷியன்கள் வரை வந்திருந்தவர்கள் அனைவரையும் மனம் திறந்து பாராட்டினார். படத்தில் தான் ரசித்த காட்சிகளையும் சொன்னார்.
தன்னுடைய 'மருதநாயகம்' ஆல்பத்தை எடுத்து வந்து எங்கள் அனைவரிடமும் காண்பித்தார். 'பசுபதி இந்த படத்துலதான் முதல்ல நடிச்சார். இதுதான் அவருக்கு முதல் படமா இருந்திருக்க வேண்டும்' எனச் சொல்லி அதில் உள்ள புகைப்படங்கள் அத்தனையையும் எங்களுக்கு காட்டியது மறக்க முடியாத அனுபவம். எல்லோரையும் தனித்தனியாக அவரோடு படம் எடுத்துக்கொள்ளவும் வைத்தார். எப்போதும் மனதில் நிற்கும் இனிமையான சந்திப்பு அது" என்றார் நடிகர் பசுபதி!
from தமிழ் சினிமா https://ift.tt/3CA8sO6
via
