தஞ்சாவூர் மாநகராட்சியின் புதிய கமிஷனராக பொறுப்பேற்ற 60 நாள்களில் நகரின் மையப்பகுதியில் தனியார் கட்டுப்பாட்டில் இருந்த மாநகராட்சிக்கு சொந்தமான சுமார் ரூ.150 கோடி மதிப்புடைய முக்கிய இடங்களை பல்வேறு எதிர்ப்புகளை மீறி கையகப்படுத்தி அதிரடி காட்டியிருக்கிறார் கமிஷனர் சரவணக்குமார். இதுபோல் தமிழகம் முழுவதும் தனியார் கட்டுப்பாட்டில் உள்ள நகராட்சி, மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களை மீட்டு அரசுக்கு வருமானத்தை பெருக்க சரவணக்குமார் வழிகாட்டியிருப்பதாக ஒரு தரப்பும், தன்னிச்சையாக செயல்பட்டு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை கேள்விகுறியாக்கி விட்டார் என மற்றொரு தரப்பும் கூறி வருவது தஞ்சையில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இது குறித்து மாநகராட்சி ஊழியர்கள் தரப்பில் பேசினோம், `தஞ்சாவூரின் மையப்பகுதி என சொல்லப்படுகிற பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் இராமநாதன் மன்றம் என அழைக்கப்படுகிற சுதர்சன நாடக சபா, யூனியன் கிளப், காவேரி லாட்ஜ், ஜீபிடர் தியேட்டர் போன்றவற்றை தனி நபர்கள் மாத வாடகை ரூ .499 வீதம் 99 வருட குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தனர். குத்தகை காலம் முடிந்த பிறகும் இடத்தை ஒப்படைக்கவில்லை.
1946-ல் அண்ணாவின் ஓர் இரவு நாடகம் சுதர்சன நாடக சபாவில் நடைபெற்றது. அதன் 25-ம் நாள் விழாவில் பாவேந்தர் பாரதிதாசன் அன்ணாவிற்கு அறிஞர் பட்டமும், அதே போல் அறிஞர் அண்ணா, கருணாநிதிக்கு கலைஞர் பட்டமும் வழங்கிய வரலாற்று சிறப்பு மிக்க இடத்தில், முன்னாள் திமுக கவுன்சிலரான ஆர்.கே.நாகராஜன் என்பவர் எலைட் டாஸ்மாக் மற்றும் பார் நடத்தி வந்தார். கலை, நாடகம், பண்பாடு ஆகியவற்றின் வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் அதிகாரத்தை பயன்படுத்தி 24 மணி நேரமும் மது விற்பனை செய்யும் கூடாரமாக மாற்றினார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் விதியை மீறி வணிக வளாகங்கள் கட்டி வாடகைக்கு விட்டிருந்தார் என்றும் கூறப்படுகிறது.
உலகத் தமிழ் மாநாட்டின் போதும், அதன் பிறகு, ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளின் போதும் பேருந்து நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்காகவும் சுதர்சன சபாவை மீட்க அதிகாரிகள் முயற்சி செய்தனர். தன் அதிகாரத்தை பயன்படுத்தி நாகராஜன் அதனை நமத்து போக செய்தார். 2006-ம் ஆண்டிலேயே அந்த இடத்தை கையகப்படுத்த வேண்டும் என அரசு உத்தரவு போட்டிருந்ததும் குறிப்பிடதக்கது.
இந்நிலையில் கமிஷனர் சரவணக்குமார் சுதர்சன சபாவிற்குள் விதியை மீறி மது விற்பதை அறிந்து டாஸ்மாக் கடைக்கு சீல் வைக்க சென்றார். அப்போது நாகராஜன், நேரடியாகவே மிரட்டினாராம். ஆனால், அதை காதில் வாங்காத கமிஷனர் சீல் வைக்க, நாகராஜன், `கதவ சாத்துங்கடா, சீல உடைங்கடானு’ கத்தினார். அதன் பிறகு நாகராஜன் மீது போலீஸ் மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
இதே போல் ஜீபிடர் தியேட்டர், யூனியன் கிளப், காவேரி லாட்ஜ் ஆகியவற்றில் மாநகராட்சி ஊழியர்களை உள்ளேயே விடாமல் எதிர்ப்பு தெரிவித்தனர். எல்லோருக்கும் முறைப்படி நோட்டீஸ் அனுப்பி சுதர்சன சபாவை தவிர மற்ற மூன்று இடங்களை மீட்டுள்ளார். விரைவில் சுதர்சன சபா மீட்கப்பட உள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பழைய பேருந்து நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட சுமார் 93 கடைகள், புதிய பேருந்து நிலையத்தில் ஏற்கெனவே கட்டப்பட்ட 51 கடைகள் ஆகியவற்றை ஓப்பன் டெண்டரில் ஏலம் விடுவதற்கு நடவடிக்கை எடுத்தார்.
தஞ்சாவூர் ஆளும்கட்சியினரே இதனை எதிர்த்ததுடன் வணிகர்களை தூண்டி விட்டு பல வகையில் குடைச்சல் கொடுத்தனராம். அதன் பஞ்சாயத்து அமைச்சர் கே.என் நேரு வரை சென்ற பிறகே அமைதியாயினர். தற்போது ஓப்பன் டெண்டரில் கடைகளை வாடகைக்கு விட்டதன் மூலம் மாநகராட்சி வருமானம் பல மடங்கு பெருகியிருப்பதாக” தெரிவித்தனர்.
சமூக ஆர்வலரான வழக்கறிஞர் நல்லதுரை என்பவர், ``கலைகளுக்கு பெயர் போன தஞ்சாவூர் நகரின் மைய புள்ளியில் மாநகராட்சி இடங்களில் டாஸ்மாக், சீட்டாட்ட கிளப், லாட்ஜ் ஆகியவற்றில் நடைபெற்ற சமூக விரோத செயல்கள் ஊரின் மதிப்பை கெடுத்ததுடன், மாநகராட்சிக்கு வருவாய் இழப்பும் ஏற்பட்டு வந்தது. கமிஷனர் சரவணக்குமார் விதிகளின் படி அவர்களிடமிருந்து ரூ. 150 கோடி மதிப்புடைய இடங்களை மீட்டுள்ளார். அவருடைய இந்த செயல் பெரும் பாராட்டுக்குரியது.
Also Read: தஞ்சாவூர்: 50 டன் கொண்ட ஒரே கல்லில் யானை, குதிரைச் சிலைகள்... கவனம் ஈர்த்த ஐயனார் கோயில் விழா!
ஓப்பன் டெண்டர் முறையில் கடைகளை வாடகைக்கு விடுவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டார். அதில் பழைய பேருந்து நிலையத்தில் ஒரு கடை சுமார் ரூ 60,000 வரை வாடகைக்கு விடப் பட்டுள்ளது. இதன் மூலம் மாநகராட்சி வருமானம் உயர்ந்திருக்கிறது. ஊழியர்களுக்கு சம்பளம் போட முடியாத நிலையில் நஷ்டத்தில் சென்று கொண்டிருந்த நிர்வாகத்தை லாப பாதைக்கு திருப்பியுள்ளதுடன் ஊழியர்களுக்கு மூன்று மாத சம்பளத்தையும் போட்டு அசத்தியிருக்கிறார்.
சட்டத்தையும், நியாய, தர்மத்தையும் மீறி தன்னிச்சையாக செய்லபடும் கமிஷனரை திரும்ப பெற வேண்டும் என ஒரு தரப்பும், ரூ.200 கோடி சொத்துக்களை மீட்டு நிதி நிலையை பெருக்கி தஞ்சையின் வளர்ச்சியில் அக்கறையோடு செயல்படும் மக்கள் சேவகர் என்று மற்றொரு தரப்பும் இரு வேரு விதமாக போஸ்டர் ஒட்டி தங்களது கருத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். பெரும்பாலானவர்கள் கமிஷனரின் துணிச்சலான செயலை வெளிப்படையாகவே பாராட்டி வருவதுடன் அவர் இன்னும் பல அதிரடிகளை செயல்படுத்த இருப்பதாகவும் கூறி வருகின்றனர்” தெரிவித்தார்.
Also Read: வீடு கேட்டு வாட்ஸ்அப்பில் மனு அனுப்பிய மாணவர்; குடும்பத்தையே நெகிழவைத்த தஞ்சை ஆட்சியர்!
கமிஷனர் சரவணக்குமாரிடம் பேசினோம், ``தனியாரிடம் உள்ள அரசுக்கு சொந்தமான இடங்களை தனி கவனம் செலுத்தி மீட்டு வருகிறோம். அவை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுவதுடன் தொழில் முனைவோர் பயன்பெறக் கூடிய வகையிலும், அரசுக்கு வருமானத்தை பெருக்க கூடிய வகையிலும் மாற்றியமைக்கப்படும்” என்றார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/2ZL6dZb
via
