நெல்லை மாவட்டத்தில் இரு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் நீதிமன்ற உத்தரவுப்படி கூடுதல் பார்வையாளர்கள் நியமிக்கப்படவில்லை என்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிப்பதற்காக ராதாபுரம் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ-வான ஐ.எஸ்.இன்பதுரை நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தார்.
இன்பதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் உள்ளே செல்ல விடாமல் போலீஸார் தடுத்து நிறுத்தினார்கள். ஊரக உள்ளாட்சித் தேர்தலில் நடக்கும் முறைகேடு தொடர்பாக புகாரளிக்க வந்திருப்பதால் தன்னை உள்ளே செல்ல அனுமதிக்குமாறு அவர் போலீஸாரிடம் கேட்டுக் கொண்டார். ஆனால் போலீஸர் அவரை அனுமதிக்க மறுத்ததால், ‘என்னை ஏன அனுமதிக்க மறுக்கிறீர்கள்? நான் என்ன தீவிரவாதியா?’ என வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தேர்தல் பணி தொடர்பாக வெளியில் சென்றிருந்ததால் அவருக்குப் பதிலாக நெல்லை கோட்டாட்சியர் சந்திரசேகர் வாயிலுக்கு வந்து இன்பதுரையிடம் மனுவைக் கொடுக்குமாறு கேட்டார். அவரிடம் தனது கோரிக்கைகளைத் தெரிவித்ததுடன் மனுவை அளித்த இன்பதுரை, பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், ”நெல்லை உள்ளாட்சித் தேர்தலில் நீதிமன்ற உத்தரவு சரிவரப் பின்பற்றப்படவில்லை. இரு கட்டங்களாகத் தேர்தல் நடத்துவதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் நான் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் சில உத்தரவுகளைப் பிறப்பித்தது. அதன்படி, வாக்குப்பதிவு நேரலை செய்யப்பட வேண்டும். கூடுதல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட வேண்டும்.
நீதிமன்றம் தெரிவித்த அறிவுறுத்தல்களை எல்லாம் நிறைவேற்றுவதாகத் தேர்தல் ஆணையம் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். ஆனால் எந்தக் கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை. தேர்தல் ஆணையம் தி.மு.க அரசின் பிடியில் இருக்கிறது.
தேர்தல் தொடர்பாக மனு அளிக்க வந்த என்னை ஆட்சியரைச் சந்திக்க உள்ளே அனுமதிக்கவில்லை. முன்னாள் எம்.எல்.ஏ-வான என்னை வெளியே நிற்க வைத்து மனு வாங்கினார்கள். என்னையே நடுரோட்டில் நிற்க வைத்து மனு வாங்கினால் பொதுமக்களின் நிலை என்னவாக இருக்கும்? அரசாங்கத்துக்கு அலுவலகம் இல்லையா, அரசு நடுத்தெருவில் உள்ளதா? அலுவலகத்தில் மனு வாங்கக்கூடாது என விதிகள் இருக்கிறதா?
ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கு கூடுதல் பார்வையாளர்களை நியமிப்பதாகவும் வாக்குச் சாவடிகள் உள்ளிட்ட இடங்களில் சிசிடிவி வைக்கப்படும் எனத் தெரிவித்த கருத்துகளையும் தேர்தல் ஆணையம் நிறைவேற்றவில்லை. கூடுதல் பார்வையாளர்களும் எங்குமே போடவில்லை. இது நீதிமன்ற அவமதிப்பு என்பதை நீதிமன்றத்தில் நாங்கள் எடுத்துரைப்போம்.
சபாநாயகர் அப்பாவு கட்சி சார்பற்றவர். ஆனால் அவரது படத்தைப் பயன்படுத்தி மாநில அமைச்சரே பிரசாரம் செய்கிறார். இது அதிகார துஷ்பிரயோகம். தி.மு.க-வின் கிளைக் கழக தேர்தலை நடத்துவது போல ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுகிறது. மாநிலத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. இது தொடர்பாக ஆளுநரிடம் புகார் அளிப்பேன். தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை. தவறுகளை களைய வேண்டும் என்பது தான் எங்களது கோரிக்கை” என்று இன்பதுரை தெரிவித்தார்.
from மாவட்ட செய்திகள் https://ift.tt/3uKg4tR
via
