போலீஸார் தாக்கியதில் உயிரிழந்தாரா கல்லூரி மாணவர்?! - உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

0

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகிலிருக்கும் நீர்கோழியேந்தலைச் சேர்ந்தவர் லட்சுமணன். இவர் மகன் மணிகண்டன. இவர், கல்லூரியில் இறுதியாண்டு படித்து வந்தார். நேற்று 5-ம் தேதி மாலை பரமக்குடி – கீழத்தூவல் சாலையில் கீழத்தூவல் காவல் நிலைய போலீஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக பைக்கில் தன் நண்பருடன் வந்த மணிகண்டனை, போலீஸார் கையசைத்து நிறுத்தச் சொல்லியிருக்கின்றனர். அப்போது, அவர் பைக்கை நிறுத்தாமல் வேகமாகச்சென்றதாகக் கூறப்படுகிறது.

உயிரிழந்த கல்லூரி மாணவர் மணிகண்டன்

அதையடுத்து, போலீஸார் மணிகண்டனைப் பின் தொடர்ந்து சென்று மடக்கி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். பின்னர், மணிகண்டனின் பைக் மற்றும் செல்போனைப் பறிமுதல் செய்த போலீஸார், நடந்த சம்பவம் குறித்து மணிகண்டனின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்திருக்கின்றனர். காவல்நிலையத்துக்கு வந்த மணிகண்டனின் பெற்றோர் லெட்சுமணன், ராமலெட்சுமி, தம்பி அலெக்ஸ் பாண்டியன் ஆகியோர் மணிகண்டனை வீட்டுக்கு அழைத்து சென்றிருக்கின்றனர்.

வீட்டுக்கு வந்த சிறிது நேரத்தில் மணிகண்டனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதனால், அவர் உறவினர்கள் 108 ஆம்புலன்ஸுக்கு போன் செய்திருக்கின்றனர். அதைத் தொடர்ந்து, ஆம்புலன்ஸும் விரைந்து வந்திருக்கிறது. ஆனால், ஆம்புலன்ஸ் மருத்துவர், பரிசோதனை செய்துவிட்டு மணிகண்டன் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகக் கூறியிருக்கின்றனர். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மணிகண்டனின் உறவினர்கள் அவர் போலீஸார் தாக்கியதால்தான் உயிரிழந்ததாகச் சொல்லி, முதுகுளத்தூர் – பரமக்குடி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலை மறியலில் உறவினர்கள்

அதனால், அந்தப் பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ``ஸ்டேஷ்னல இருந்து கூட்டிட்டு வரும்போது நடக்கக்கூட முடியாம தான் நடந்து வந்தான். வாயில நுரை தள்ளிக் கிடந்தான். போலீஸ்காரங்க அடிச்சதுனாலதான் எம் புள்ள இறந்து போயிட்டான். சம்பந்தப்பட்ட போலீஸ்காரங்க மேல நடவடிக்கை எடுக்கணும்" என்கின்றனர் மணிகண்டனின் பெற்றோர். ஆனால் மணிகண்டன், ``பாம்பு கடித்து இறந்திருக்கலாம்” என போலீஸ் தரப்பில் முதலில் விளக்கம் சொல்லப்பட்டது.

பின்னர், ``மாணவர் மணிகண்டன் போலீஸார் தாக்கியதில் உயிரிழந்ததாகச் சொல்லபடும் குற்றச்சாட்டில் உண்மை இல்லை. அவருக்கு அறிவுரை சொல்லியே போலீஸார் அனுப்பி வைத்திருக்கின்றனர்” எனவும், மாணவர் மணிகண்டனை அவர் பெற்றோர் அழைத்துச் சென்றதற்கான கடிதத்தையும் வெளியிட்டு மாவட்ட எஸ்.பி கார்த்திக் விளக்கமளித்தார்.

அதையடுத்து, நேற்றிரவு மணிகண்டனின் உடல் உடற்கூராய்வு செய்யப்பட்டது. இந்த நிலையில், மணிகண்டனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், ``காவல்துறையினரின் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவர் மணிகண்டன் மர்மான முறையில் உயிரிழந்தது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறேன்” என அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் ட்வீட் செய்திருக்கிறார்.

உயிரிழந்த மணிகண்டனின் தாய் மற்றும் உறவினர்கள்

போலீஸார் மணிகண்டனின் உறவினர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். போலீஸார் தாக்கியதால் மணிகண்டன் உயிரிழந்தாகச் சொல்லப்பட்டு வந்தாலும், பிரேத பரிசோதனை அறிக்கை மூலம்தான் மணிகண்டனின் இறப்புக்கான காரணம் தெரிய வரும். மாணவர் மணிகண்டனின் மர்ம மரணத்தால் முதுகுளத்தூரில் பதற்றமும் பரபரப்பும் ஏற்பட்டிருக்கிறது.

Also Read: `அங்கேயே அப்பா உயிரு போயிடுச்சு..!’ -காவலர்கள் தாக்கியதில் உயிரிழந்தாரா பெட்டிக்கடை உரிமையாளர்?!



from மாவட்ட செய்திகள் https://ift.tt/3pyCzQ4
via

Post a Comment

0Comments

Please Select Embedded Mode To show the Comment System.*