ஜூன் மாத இறுதியில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். நிகழ்ச்சியை முடித்துகொண்டு சென்னை திரும்பிய முதல்வரிடம், வேலூர் சேண்பாக்கம் பகுதியைச் சேர்ந்த எம்.ஜி.ஆர் ரசிகரான ஆட்டோ ஓட்டுநர் பன்னீர்செல்வம் என்பவர் கடிதம் எழுதி அனுப்பியிருக்கிறார். அந்தக் கடிதத்தில், ‘‘மாண்புமிகு முதல்வர் அவர்களே, நீங்கள் ஆட்சிப் பொறுப்பேற்றபோது, ‘எனக்கு வாக்களித்த மற்றும் எனக்கு வாக்களிக்காத மக்களின் நம்பிக்கையையும் காப்பாற்றும் விதத்தில் ஆட்சி செய்வேன்’ என்று கூறியிருந்தீர்கள். அந்த வகையில், உங்களின் சிறப்பான ஆட்சிக்கு, உங்களுக்கு வாக்களிக்காத எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகனான, இந்த பன்னீர்செல்வத்தின் வாழ்த்துகள். நீங்கள் வேலூர் வந்தபோது, எந்தவித போக்குவரத்து இடையூறின்றி நாங்கள் நிம்மதியாக ஆட்டோ ஓட்டினோம்.
எங்கள் தொழில் எந்த விதத்திலும் பாதிக்கப்படவில்லை. இவை அனைத்தும் தங்களின் உத்தரவின்பேரில் தான் நடந்திருக்கும் என்பதை நான் அறிகிறேன். மேலும், நீங்கள் பல நல்ல திட்டங்களை தந்து தமிழ்நாட்டை முன்னேற்றுவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டுவிட்டது. வாழ்த்துகள் ஐயா’’ என்று குறிப்பிட்டிருந்தார்.
அந்த கடிதத்தோடு, கலைஞருடன் எம்.ஜி.ஆர் இணைந்திருக்கும் புகைப்படம், எம்.ஜி.ஆர் உடன் ஸ்டாலின் இருக்கும் புகைப்படத்தையும் இணைத்து அனுப்பியிருந்தார். அந்த கடிதத்தைப் படித்த முதல்வர் ஸ்டாலின், ஆட்டோ ஓட்டுநர் பன்னீர்செல்வத்தை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்து, நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார்.
முதல்வருடன் ஆட்டோ ஓட்டுநர் பேசும் உரையாடல் ஆடியோ வெளியிடப்பட்டிருக்கிறது. அதில், ‘‘ஹலோ, பன்னீர்செல்வங்களா... நான் மு.க.ஸ்டாலின் பேசுறேன்’’ என்று சொன்னதுமே, மறுமுனையிலிருந்து ‘ஆமாங்கண்ணே, வணக்கம். சொல்லுங்கண்ணா’ என்கிறார் பன்னீர்செல்வம். உடனே முதல்வர், ‘உங்க கடிதத்தைப் படிச்சேன். நீங்க புரட்சித் தலைவர் ரசிகர்னு சொல்லியிருக்கீங்க. நானும் எம்.ஜி.ஆர் ரசிகன் தான். எனக்குப் பாராட்டி கடிதம் எழுதியிருக்கீங்க. உங்கப் பாராட்டுக்கு நன்றி சொல்லத்தான் போனை போட்டேன்’’ என்றார். எதிர் முனையிலிருந்த பன்னீர்செல்வம், மகிழ்ச்சியில் திழைத்த ஆரவாரத்துடன் ‘‘ரொம்ப நன்றிங்கண்ணா, நீங்களே லைன்ல வந்தது ரொம்ப சந்தோஷம். உங்க கைக்கு என் லெட்டர் கிடைக்காதுன்னு நெனச்சிக்கிட்டிருந்தேன்’’ என்கிறார்.
அதற்கு முதல்வர், ‘‘அதெப்படிங்க வராமலிருக்கும். கரெக்ட்டா கைக்கு வந்து சேர்ந்துடுச்சி. என்ன செய்யுறீங்க..?’’ என்று கேட்க, ‘‘ஆட்டோ ஓட்டுகிறேன் அண்ணா...’’ என்கிறார் பன்னீர்செல்வம். அதைக்கேட்ட முதல்வர், ‘‘எங்கே டவுனுக்கு உள்ளேயா.. சரி தம்பி, சரி தம்பி’’ என்பதோடு உரையாடல் முடிகிறது. இந்த உரையாடல், தற்போது இணையத்தில் வைரலாகி, மக்கள் மத்தியிலும் மிகுந்த வரவேற்பையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.
இது குறித்து, ஆட்டோ ஓட்டுநர் பன்னீர்செல்வத்திடம் கேட்டபோது, ‘‘முதல்ல சி.எம் தான் பேசுறாரா... யாராவது மிமிக்ரி பன்றாங்களான்னு நெனச்சேன். அப்புறம் ஐயா தான் பேசுறாருனு தெரிஞ்சதும், எனக்கு கை கால் உதறல் எடுத்துக்கிச்சி. வெறும் 1 ரூபாய் கடிதம் தான் அனுப்புனேன். அவரே அழைச்சிப் பேசுவாருனு நெனச்சிக்கூட பார்க்கலை. எல்லோரும், எனக்கு வாழ்த்து சொல்றாங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு’’ என்றார் நெகிழ்ச்சியோடு!
from மாவட்ட செய்திகள் https://ift.tt/UAhZx5t
via
